அரிசி, கோதுமை போன்று கேழ்வரகையும் இனி ரேஷன் கடையிலேயே வாங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கி அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
கேழ்வரகு சிறந்த ஆரோக்கிய உணவாகும் கருதப்படுகிறது. நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடியின, மலைவாழ் மக்களின் பிரதான உணவாக கேழ்வரகு உள்ளது.
இதையும் படிங்க - ரேஷன் பொருள் வழங்கல் துறையின் 12 முக்கிய அறிவிப்பு...
இம்மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்தசோகை நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் வளர் பருவத்தில் அதிக அளவில் உள்ளனர். அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்கினால் இந்த மாவட்ட மக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைப்பதுடன் பழங்குடியின மலைவாழ் மக்களின் உணவு பழக்க வழக்கங்களும் பாதுகாக்கப்படும்.
எனவே பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகு அரிசிக்கு பதிலாக வழங்கும் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாக நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
இதையும் படிங்க - ரேஷன் கடைகளில் இனி பாக்கெட் அரிசி! - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை விற்பனையாளர்கள்/ எடையாளர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும்.
தற்போது புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகள் வட்ட வழங்கல் அலுவலகம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மண்டல அலுவலகங்கள் மூலமாக பெற்று வருகின்றனர்.
உறுதி செய்யப்பட்ட சேவையினை அளிக்கும் பொருட்டு நேரடியான தொடர்பினை தவிர்க்கும் பொருட்டும் இந்திய அஞ்சல் துறையின் மூலம் பயனாளிகள் இருப்பிடத்திற்கு பயனாளிகளின் விண்ணப்பத்தின் பேரில், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அனுப்பப்படும். இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.