அபராதம் செலுத்தினாலும், சசிகலா முன்கூட்டியே விடுதலை இல்லை.. பெங்களூரு சிறை கண்காணிப்பாளர்..

சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் சசிகலா தரப்பில், பெங்களூரு நீதிமன்றத்தில் அபராதத்தொகை செலுத்தப்பட்டுள்ளது.

 • Share this:
  ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில், 1991 முதல் 96-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. கர்நாடகாவுக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்ற தனி நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார். அவர் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் செய்த மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதி குமாரசாமி, தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

  தண்டனை ரத்தை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இறுதியில், நீதிபதி மைகேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதற்கிடையே, ஜெயலலிதா காலமானதால் மற்ற மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

  இதையடுத்து மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 3 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்களாக சிறை தண்டனையை சசிகலா அனுபவித்து வருகிறார்.

  இந்நிலையில், அபராதத் தொகையான ரூ.10.10 கோடி ரூபாயை வரையோலையாக பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு புதன்கிழமை செலுத்தியுள்ளது. பழனிவேலு என்பவரது பெயரில் 3 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும், வசந்ததேவி என்பவரது பெயரில் 3 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும் வரைவோலை செலுத்தப்பட்டது.

  மா என்பவரது பெயரில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள வரைவோலை அளிக்கப்பட்டது. சசிகலாவின் உறவினர் விவேக் பெயரில் 10,000 ரூபாய்க்கான வரைவோலை வழங்கப்பட்டது.சசிகலா தரப்பு சமர்ப்பித்த 4 வரைவோலைகளையும் பெங்களூர் தனி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

  அபராதத்தொகையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால், சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணத்தின் படி, 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...சசிகலா சிறையிலிருந்து வந்தால் அ.தி.மு.கவில் எந்த மாற்றமும் நிகழாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி  சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சசிகலாவின் விடுதலை குறித்த செய்தி, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா தரப்பில் அபராதம் செலுத்தினாலும் அடுத்த ஆண்டு ஜனவரி 20-க்குப் பிறகே விடுதலை செய்யப்படுவார் என பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி தெரி்வித்துள்ளார். சசிகலாவின் விடுதலை நாள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
  Published by:Vaijayanthi S
  First published: