தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு கடந்த 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களால் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து இந்த 4 தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, 4 தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. 30-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், வேட்புமனுக்களை திரும்ப பெற மே 2-ம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இன்று வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக தலைமை வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் அதிமுக சார்பில் நேற்று விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, நேர்காணலும் நடைபெற்றது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மூத்த தலைவர்கள் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டமும் இன்று நடைபெற உள்ளது.
அதேசமயம் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக ஏற்கனவே அறிவித்துள்ளது. அக்கட்சி வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also see... இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு...! என்ன நடக்கிறது?
Also see... இலங்கை தொடர் குண்டு வெடிப்பு விவகாரத்தில் திருப்பம்
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.