பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சிறப்பு டிஜிபி, ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த குழு விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிராக குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐ.ஜி. அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படுவர் என்பதால் இருவரையும் நீக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்ததாகவும், இந்த மனு பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கி விட்டதாகவும் ராஜேஷ் தாஸ் குற்றம் சாட்டி இருந்தார்.
மேலும், சாட்சிகள் பலர், புகாரளித்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கீழ் பணியாற்றுபவர்கள் என்பதால், அவரை இடமாற்றம் செய்யக் கோரியும், அது ஏற்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டப்படி இயற்கை நீதியை பின்பற்றி முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு டிஜிபி தரப்பில், விசாகா கமிட்டி விசாரணையில் சாட்சிகளின் வாக்குமூல அறிக்கையை தனக்கு தரப்படவில்லை என்றும், பாரபட்சமான விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளதாகவும் வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி சிறப்பு டிஜிபி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், கமிட்டியில் உள்ள அருண் என்ற அதிகாரி மாற்றப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தனக்கு எதிரான விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Must Read : திருச்சியில் இளங்கோவனுக்கு சொந்தமான நான்கு இடங்களில் ரெய்டு
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், விசாகா கமிட்டி விசாரணையின் ஏற்கனவே உள்ள நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.