கிணற்றில் நீச்சல் பயிற்சி அளித்த தந்தை மகனுடன் சேர்ந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு

Youtube Video

திருப்பத்தூர் அருகே, கிணற்றில் பிளாஸ்டிக் டப்பாவைக் கட்டிக் கொண்டு நீந்திக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் மற்றும் அவருக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த தந்தை இருவரும் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஓட்டுப் போடுவதற்காக ஊருக்கு வந்த தந்தைக்கும் மகனுக்கும் நடந்தது என்ன?

  • Share this:
    ஓட்டுப் போடுவதற்காக ஊருக்கு வந்த தந்தை பாலாஜி, தன் மகன் ஜெகதீஷுடன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நீச்சல் கற்றுக் கொடுத்த சம்பவம், இருவர் மரணத்தில் முடிந்தது எப்படி?

    திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான பாலாஜி. மனைவி பவிதா, 10 வயதான மகள் கீர்த்தனா, 8 வயதான மகன் ஜெகதீஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். கூலித் தொழில் பார்த்து வந்த பாலாஜி, வேலை நிமித்தமாக சென்னையில் வசித்து வந்தார். மாதம் ஒரு முறை ஊருக்கு சென்று வருவார். சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் சென்றார் பாலாஜி. தேர்தல் நாளன்று, வாக்களித்து விட்டு வீட்டிற்குத் திரும்பியவர், மகன் ஜெகதீஷ் நீச்சல் கற்றுத்தரும்படி கேட்டதால் கிணற்றுக்கு அழைத்துச் சென்றார்.

    வீட்டில் இருந்து 5 லிட்டர் பிளாஸ்டிக் கேனை எடுத்துச் சென்ற பாலாஜி, மகனின் இடுப்பில் அதைக் கட்டி கிணற்றில் இறக்கியுள்ளார். தானும் இறங்கி நீச்சல் கற்றுக் கொடுத்தார். பின்னர் கிணற்றின் மேலேறி கரையில் அமர்ந்து கொண்டார்.

    சிறிது நேரத்தில் ஜெகதீஷின் இடுப்பில் இருந்து கயிறு அவிழ்ந்து பிளாஸ்டிக் கேன் கழன்று விட்டது. அதனால் ஜெகதீஷ் அலறியபடியே கிணற்று நீரில் மூழ்க ஆரம்பித்தார். அதைப் பார்த்து பதறிப் போன பாலாஜி, மகனைக் காப்பாற்றும் அவசரத்தில் அதிக வேகத்தில் கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

    குதித்த வேகத்தில் கிணற்றின் அடியில் உள்ள சகதியில் மாட்டிக் கொண்டு வெளியே வர முடியாமல் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார்.  சிறுவன் ஜெகதீஷும் நீச்சல் தெரியாத நிலையில் கிணற்று நீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார் சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்தவர்கள், பிளாஸ்டிக் கேன் மிதப்பதைப் பார்த்து சந்தேகமடைந்து கிணற்றில் இறங்கித் தேடிய போது இருவரது உடல்களும் இருந்தது தெரியவந்தது.

    மேலும் படிக்க... 2000 ரூபாய் டோக்கன் : தஞ்சையில் வாக்காளர்களுக்கு போலி டோக்கன் வழங்கிய அமமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

    சடலங்களை மீட்டு கந்திலி போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஓட்டுப்போட ஊர் திரும்பிய தந்தை மற்றும் அவரது மகன் இருவரும் கிணற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: