திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த பிள்ளாபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 52 வயதான தங்கவேல் - செல்வராணி தம்பதி ஒரு மகள் திருமணமான நிலையில், 29 வயதான கோபி என்ற மகன் இருந்தார். கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கோபி வாகன விபத்தில் படுகாயமடைந்து, கோமா நிலையில், கை, கால்கள் செயலிழந்து முடங்கியுள்ளார்.
கோபியை அவரது பெற்றோர் வீட்டில் வைத்து பராமரித்து வந்தனர். இந்நிலையில் தங்கவேலுக்கும் அவரது மனைவி செல்வராணிக்கும் கடந்த 10 தினங்களாக நடந்த தகராறில், செல்வராணி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மகன் கோபியை பராமரிக்கும் பொறுப்பு தந்தை தங்கவேலுக்கு வந்தது. ஆனால் மகனை பராமரிக்க முடியாமல் தங்கவேலு சிரமப்பட்டுள்ளார்.
மேலும், தனக்கு பிறகு மகனை யார் காப்பாற்றுவார்கள் என்று வேதனையில் ஆழ்ந்துள்ளார். ஒரு கட்டத்தில் சலிப்பும் கோபமும் அடைந்த தங்கவேல், புதன் கிழமை இரவு மகன் கோபியை தரதரவென வீட்டைவிட்டு வெளியே இழுத்து வந்துள்ளார்.
வீட்டிற்கு வெளியே வைத்து மகனின் கழுத்தை கத்தியால் அறுத்து கழிவுநீர் தொட்டியில் தள்ளி மூடிவிட்டு தலைமறைவானார். வீட்டு வாசலில் ரத்தக் கறைகள் இருக்கவே சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கழிவு நீர் தொட்டியை திறந்து பார்த்த போது கோபியின் சடலம் கிடந்துள்ளது.
திருச்சியில் திறந்திருந்த சாக்கடையில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீசார் சடலத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஊரில் பதுங்கியிருந்த தங்கவேலுவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பச் சண்டையில் மனைவி பிரிந்த நிலையில், மகனைப் பராமரிக்க முடியாமல் தந்தையே கொலை செய்த சம்பவம், முசிறியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்