பா.ஜ.க வேட்பாளருக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்ய அய்யாக்கண்ணு தலைமையில் முழு நிர்வாணமாக வந்த விவசாயிகள் கைது

விவசாயிகள் போராட்டம்

பாஜக வேட்பாளருக்கு எதிராக நிர்வாணமாக வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட 15 விவசாயிகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர். 

  • Share this:
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தணிகைவேல், கோட்டாட்சியரும் மற்றும் தேர்தல் அலுவலருமான வெற்றிவேல்யிடம் நேற்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்தும், கோதாவரி, காவிரி நதிகளை இணைக்க நிதி ஒதுக்கீடு செய்யாத பா.ஜ.க அரசைக் கண்டித்து திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்கு வந்தவாசி பகுதியைச் சேர்ந்த தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாவட்ட நிர்வாகி தினேஷ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யச் சென்றார்.

திருவண்ணாமலை பெரியார் சாலையில் இருந்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர். இதில் அரை நிர்வாணத்துடன் ஊர்வலமாக வந்த இரண்டு விவசாயிகள் திடீரென அவர்களது வேட்டியை அவிழ்த்து நிர்வாண ஊர்வலமாக வருகை தந்தார். நிர்வாணமாக வந்த விவசாயிகளை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக தடுத்து நிறுத்தி அவர்களுக்கு வேட்டியை கட்டினர்.

இதனைத் தொடர்ந்து அவர்களை வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதிக்காததால் காவல்துறையினர் கண்டித்து அங்கேயே அய்யாக்கண்ணு தலைமையில் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட 15 விவசாயிகளை கைது செய்து திருவண்ணாமலை காவல் நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர். பாஜக வேட்பாளருக்கு எதிராக நிர்வாண ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்த அந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர்: சதிஷ்உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: