வேளாண் சட்டத்தால் இந்தியாவே பற்றி எரிகிறது - கனிமொழி ஆவேசம்

வேளாண் சட்டத்தால் இந்தியாவே பற்றி எரிகிறது - கனிமொழி ஆவேசம்

தூத்துக்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

வேளாண் சட்டத்தினால் இந்தியாவே பற்றி எரிக்கூடிய நிலையில் உள்ளதாக திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
புதிய வேளாண் சட்டத்தைக் கண்டித்தும், திரும்பப்பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே திமுக கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாநில மகளிர் அணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி, கீதா ஜீவன் எம்எல்ஏ, திமுக கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்டு வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். ‌போராட்டத்தில் ஒருவர் ஏர் கலப்பையுடன் கலந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து கனிமொழி எம்பி பேசுகையில், மத்திய அரசு எந்த சட்ட மசோதாவையும் விவாதிக்க தயாராக இல்லை. எதிர்க்கட்சி எம்பிக்களை மதிப்பதில்லை. பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வருவதையே ஒரு பெரிய நிகழ்வாக பார்க்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் புதிய வேளாண் சட்டத்தை எதிர்க்கின்றனர். வட மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொரோனாவைப் பயன்படுத்தி கார்பரேட் நிறுவனங்களுக்கு  ஆதரவாக புதிய விவசாய வேளாண் சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். சிறு, குறு விவசாயிகள் பற்றி அரசுக்கு கவலையில்லை என்றார்.

விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை உள்ளதாகக் கூறிய கனிமொழி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமை சாசனம் எழுதித் தரும் சட்டம் அது. மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்கள் அனைத்தும் மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளன. புதிய கல்விக் கொள்கை பற்றி விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை. தமிழகத்தில் உயர் கல்வி சிறப்பாக இருக்கிறது. ஆனால், அதையும் நீட் போன்ற தேர்வு கொண்டு வந்து சீர்குலைக்க மத்திய அரசு முயல்கிறது. தமிழகத்தில் கிட்டத்தட்ட பாஜக அரசு நடைபெறுகிறது. தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ஆதரிக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும். திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதும் மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்றார்.

இதையடுத்து கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், விவசாயிகளின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் 3 வேளாண் மசோதாக்கள் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. எல்லா எதிர்க்கட்சிகளும் இந்தச் சட்டங்களை எதிர்த்து பேசியுள்ளன. விவசாயிகள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இந்தியாவே பற்றி எரிக்கூடிய நிலையில், மத்திய அரசு பிடிவாதமாக இந்த மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டம் தொடரும், இந்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும், இல்லையென்றால் விவசாயிகள் கேட்கும் பாதுகாப்பு அம்சங்களை சட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

Also read: பி.டி.கத்தரிக்காய் விதைகளை களப் பரிசோதனை செய்ய அனுமதிக்கக்கூடாது - முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்தொடர்ந்து பேசிய அவர், இந்தச் சட்டம் ஆன்லைன் வர்த்தகத்திற்கு உதவி செய்யக்கூடியது. கார்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயிகளை அடிமைகளாக மாற்றுவதற்கான சட்டம், பொது விநியோகத்தை அழிக்கக்கூடிய சட்டமாகவும் உள்ளது. நுகர்வோருக்குக்கூட எதிராக இருக்கும் இச்சட்டங்களை மத்திய அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும். இதுபோன்ற சட்டங்களைப் பிடிவாதமாக விவசாயிகள் மீது திணிக்கக் கூடாது என்றார்.

யூரியா உர தட்டுபாடு குறித்து அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து கொண்டு சென்றுள்ளேன்; விரைவில் சரி செய்யப்படுவதாக அதிகாரிகள் உறுதியளித்ததாகக் கூறிய கனிமொழி, மக்காச்சோளம் உள்ளிட்ட மானவாரி நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை அத்தியாவசிய உணவுப்பொருட்கள் பட்டியில் சேர்க்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். இதுதொடர்பாக மத்திய அமைச்சருக்கு விரைவில் கடிதம் எழுதவுள்ளேன். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு புதிய வேளாண் சட்டம் பற்றிய புரிதல் மற்றும் விழிப்புணர்வு இருக்கிற காரணத்தால்தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
Published by:Rizwan
First published: