மேகதாது அணை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா நோக்கி விவசாயிகள் பேரணி: தமிழக எல்லையிலே கைது செய்த காவல்துறை

மேகதாது அணை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா நோக்கி விவசாயிகள் பேரணி: தமிழக எல்லையிலே கைது செய்த காவல்துறை

விவசாயிகள் போராட்டம்

கர்நாடகா அரசின் மேகதாது அணை அறிவிப்புக்கு எதிராக பேரணியாக கர்நாடாவுக்கு செல்ல முயன்ற தமிழக விவசாயிகளைக் காவல்துறை கைது செய்தது.

  • Share this:
மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க தமிழகத்தில் இருந்து பேரணியாக கர்நாடகாவிற்குள் செல்ல முயன்ற விவசாயிகள் 250 க்கும் மேற்பட்டோர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணைகட்ட 9,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்க இருப்பதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடந்த வாரம் சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தார். இந்த நடவடிக்கைக்கு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழுவினைச் சேர்ந்த சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் உட்பட டெல்டா மாவட்டங்களில் இருந்து 17 வாகனங்களில் விவசாயிகள் சத்தியமங்கலம் வந்தனர்.
சத்தியமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்திய விவசாயிகள் பின்னர் அங்கிருந்து வாகனத்தில் சிறிது தூரம் சென்றனர். பின்னர்  கர்நாடக மாநிலம் நோக்கி பேரணியாக  செல்லத் துவங்கினர். அணைகட்டபடும் மேகதாது என்ற இடத்திற்கு நடந்தே செல்ல போவதாக கூறிய விவசயிகள் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கோம்பைபள்ளம் என்ற இடம் வரை சுமார் 3  கிலோ தூரம் ஊர்வலமாக நடந்து வந்தனர்.

கோம்பை பள்ளத்தில் ஊர்வலமாக வந்த விவசாயிகளை சத்தியமங்கலம் காவல் துறையினர்  தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே  லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பேசிய அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன், உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக கர்நாடக அரசு மேகதாதுவில்  அணைகட்ட 9,000 கோடி ஒதுக்கி இருப்பதாகவும், இதற்கு மத்திய அரசும் உடந்தையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

கர்நாடக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்ததை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டிக்காமல் அமைதியாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்த அவர்கள் தேர்தல் அதிகாரிகள் வரும் வரை இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம் எனக்கூறி கோம்பை பள்ளம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில், விவசாயிகளுடன் துணைத் தேர்தல் நடத்தும் அதிகாரியும்,  வட்டாட்சியருமான ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் சங்க நிர்வாகிகளின் கோரிக்கையை சரியாக கேட்காமல் அலட்சியப்படுத்தியதாக கூறபடுகிறது. இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் வட்டாட்சியர் ரவிச்சந்திரனுக்கு எதிராக முழக்கமிட்டனர். கர்நாடக அரசுக்கு சாதகமாக வட்டாட்சியர் ரவிச்சந்திரன் செயல்படுவதாக கூறி விவசாயிகள் முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உட்பட 250 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: