விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 72 வயது விவசாயி மர்ம மரணம்.. நடந்தது என்ன?

விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 72 வயது விவசாயி மர்ம மரணம்.. நடந்தது என்ன?

அணைக்கரை முத்து- விவசாயி

விவசாயி அணைக்கரை முத்து மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளதால், சர்ச்சை வெடித்துள்ளது. விசாரணைக்கு நள்ளிரவு அழைத்துச் சென்றது ஏன்? அவரது உடலில் இருந்தது 18 காயங்களா? 4 காயங்களா?

 • Share this:
  இரவு நேரத்தில் வனத்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று 72 வயதான முதியவர் என்றும் பாராமல் அணைக்கரை முத்துவை அடித்தே கொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். நடந்தது என்ன?

  தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 72 வயதான முதியவர் அணைக்கரை முத்து. விவசாயியான இவர் தனது தோட்டத்தில் காய்கறிகள் பயிரிட்டிருந்தார். அதைச் சுற்றி சிறிய அளவில் மின்வேலியும் அமைத்திருந்தார்.

  தகவல் அறிந்த கடையம் வனத்துறையினர் கடந்த 22ம் தேதி இரவு 11. 30 மணிக்கு முதியவரை, சட்டை அணியக்கூட நேரம் தராமல் அப்படியே கடையம் வனச்சரக அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

  நள்ளிரவு 1.30 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டதாக வனத்துறையினர், அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் விசாரணையில் முத்துவின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

  சம்பவத்தில் தொடர்புடைய, கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம், வனவர் முருகசாமி, வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சக்தி முருகன், பசுங்கிளி, மனோஜ் மணிகண்டன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி முத்துவின் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

  உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி இரவே சிறப்பு அனுமதி பெறப்பட்டு முத்துவின் சடலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் வனச்சரகத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

  அணைக்கரை முத்து குடும்பத்திற்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

  ஆனால், சிபிசிஐடி விசாரணை, மறுபிரேத பரிசோதனை ஆகியவற்றை வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், முத்துவின் மனைவி பாலம்மாள் மனுதாக்கல் செய்தார்.

  திருநெல்வேலி மருத்துவமனை தடயவியல் துறையின் தலைமை மருத்துவர் செல்வமுருகன் அங்கு இருந்த போதும் அவரை கொண்டு பிரேத பரிசோதனை நடத்தவில்லை. அதற்கு மாறாக உதவி பேராசிரியர் சீதாலட்சுமி வழிகாட்டுதலின் படி மருத்துவர் ஸ்ரீதர் தலைமையில் பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது.

  இரவோடு இரவாக பிரேதப் பரிசோதனை நடந்துள்ளது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது என குடும்பத்தினர் கூறியிருந்தனர்.

  உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஒருவரை கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை ஏன் கடைபிடிக்கவில்லை என குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவில் குற்றம்சாட்டியிருந்தனர்.

  விதிகளை மீறி மாலை 4 மணிக்கு மேல் அவசர அவசரமாக உடற்கூறாய்வு நடத்தப்பட்டது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக அரசு தரப்பு பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.

  இந்த நிலையில், அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட உடற்கூறாய்வு அறிக்கையில், விவசாயி முத்துவின் உடலில் 4 காயங்கள் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

  மாஜிஸ்திரேட் அறிக்கையில் 18 காயங்கள் என்று சொல்லியிருந்த நிலையில், இப்போது 4 காயங்கள் மட்டும் இருந்ததாக கூறியுள்ளது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில் முதியவர் முத்து மரணத்தில் தங்களுக்குப் பல சந்தேகங்கள் இருப்பதாக குடும்பத்தினர் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

   

  மேலும் படிக்க...மருந்தக உரிமையாளரிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி: நடந்தது என்ன? நடவடிக்கை பாயுமா?

  இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றப்படுமா? மறு உடற்கூறு ஆய்வு நடத்தவேண்டுமா? என்பது குறித்து வியாழன் அன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது
  Published by:Vaijayanthi S
  First published: