மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று ஆற்றிய உரையில், மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்யபட்டிருப்பதாகவும் அத்துடன் போராட்டம் நடத்தும் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டுவந்தோம். ஆனால், அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை என்பது வருத்தம் அளிப்பதாகவும் எனவே மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுகிறோம் என்றார்.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும். இதுவே வரலாறு சொல்லும் பாடம்.
உழவர் பக்கம் நின்று போராடியதும். வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்.அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.