தமிழகத்தில் 24 டோல்கேட்களில் கட்டணம் உயர்வு

டோல்கேட்

தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.

 • Share this:
  தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் 5 முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் எதிர்ப்பும் வருத்தமும் தெரிவித்துள்ளனர்.

  தமிழகத்தில் 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ., சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீதமுள்ள 1,472 கி.மீ., சாலைகள் மத்திய அரசின் நிதியில், மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.

  சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். அதற்கு பின்னர் 40 சதவீத சாலை பராமரிப்புக்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 8-10 சதவீத அளவிற்கு சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

  இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளிலும் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி 21 சுங்க சாவடிகளில் 5% முதல் 10% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் 24 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

  அதன்படி, திருச்சி சமயபுரம் சுங்கசாவடி, திருப்பராய்த்துறை (திருச்சி-கரூர்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை, விருதுநகர் புதூர்பாண்டியாபுரம், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம், சேலம் ஒமலூர், நத்தக்கரை, வைகுந்தம், வீரசோழபுரம், சேலம் மேட்டுபட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், குமாரபாளையம் விஜய மங்கலம், விழுப்புரம் விக்கிரவாண்டி மொரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி உள்பட 24 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

  உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கார், வேன், ஜீப்புக்கு ஒருமுறை கட்டணம் ரூ.55 ஆகவும், பலமுறை கட்டணமாக 85 ரூபாயும், மாத கட்டணமாக 1,710 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் இலகுரக வாகனங்கள் ஒரு முறைக்கு 100 ரூபாயும், பல முறைக்கு 150 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

  பல அச்சுகள் கொண்ட வாகனத்திற்கு ஒரு முறை 320 ரூபாயும், பல முறைக்கு 480 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே உள்ள கட்டணங்களை விட தற்போது ரூ.5 முதல் ரூ.20 வரையில் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு, பல்வேறு கட்சிகள், ஆம்னி பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  Must Read : டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.500 வரை உயர்வு - அதிர்ச்சியில் மது பிரியர்கள்!

  அதையும் மீறி, கட்டண உயர்வை சுங்கச்சாவடி நிர்வாகங்கள் நடை முறைப்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: