முன்னாள் நண்பர்களின் கேங்க் வார் மோதல்... கொலை வரை சென்றது எப்படி? சினிமாவை மிஞ்சும் குற்றப்பின்னணி

மாதிரிப்படம்

வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சினிமாவை மிஞ்சும் குற்றப் பின்னணி வெளிச்சத்துக்கு வந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
முன்னாள் நண்பர்களின் கேங்க் வார் மோதலால் சேத்துப்பட்டு அருகே பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சேத்துப்பட்டு முத்தையப்பன் தெரு வழியாக நேற்றிரவு ஒருவர் வந்துகொண்டிருந்தபோது ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரை வெட்டி படுகொலை செய்தது. தகவலறிந்த சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடம் விரைந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சினிமாவை மிஞ்சும் குற்றப் பின்னணி வெளிச்சத்துக்கு வந்தது.
கொலை செய்யப்பட்ட நபர் தாம்பரம் சானடோரியம் துர்க்கையம்மன் பகுதியை சேர்ந்த கருப்பு வடிவேல் என்கிற வடிவழகன் (27) என்பதும், இவர் தற்போது செனாய் நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் கொலை செய்யப்பட்ட கருப்பு வடிவேல் மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட பல குற்ற வழக்குகள் பல காவல் நிலையங்களில் உள்ளது என்பதும் தெரியவந்தது. சூளைமேடு சேர்ந்த ஸ்டீபன்(22), மதுரவாயலை சேர்ந்த காரமணி என்கிற வினோத்குமார்(23) சேத்துப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ரஜினி(45), அப்பு (எ)அருள்முருகன் (19) நமசிவாயபுரத்தைச் சேர்ந்த சாய் மற்றும் நிர்மல் ஆகிய ஏழு பேரும் சேர்ந்து வடிவழகனை வெட்டி படுகொலை செய்தது சிசிடிவி காட்சிகளில் தெளிவாகின.

இதனையடுத்து இரவோடு இரவாக தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், ஸ்டீபன் காராமணி(எ) வினோத்குமார், ரஜினி, அப்பு(எ) அருண் குமார் ஆகிய நான்கு நபர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஸ்டீபன் மீது 2015ஆம் ஆண்டு மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நுங்கம்பாக்கம் தண்டவாளத்தில் செய்த 2 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

அதேபோல காராமணி (எ) வினோத்குமார் மீது 2018ஆம் ஆண்டு சேத்துப்பட்டு பகுதியில் நடந்த கொலை வழக்கு உட்பட பல்வேறு கொலை முயற்சி, அடிதடி, திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் மற்றவர்கள் மீதும் சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி, திருட்டு, வழிப்பறி என பல்வேறு குற்ற சம்பவம் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

Also read... தண்ணீர் பிடிப்பதில் தகராறு... திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை - இருவர் கைது!

மேலும்,  கொலைசெய்யப்பட்ட வடிவழகனும் கொலை செய்த 7 நபர்களும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நெருங்கிய நண்பர்களாக இருந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுப்படுவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளனர். கடந்த 2015 ஆண்டு நுங்கம்பாக்கம் இரயில்வே தண்டவாளத்தில் சைத்தான் (எ) சுரேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் ரஜினி, கடுகு, பட்டு (எ) பார்த்திபன், ஸ்டீபன் ஆகிய நான்கு நபர்களும் சிறைக்கு சென்றுள்ளனர்.

இதில் பட்டு (எ) பார்த்திபனுக்கும், பாம்பு வினோத் என்பவருக்கும் இடையே சிறைக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பாம்பு வினோத்தும், தற்போது கொலை செய்யப்பட்டுள்ள வடிவழனும் குற்ற வழக்கு நண்பர்கள் என்பதால், தனது கேங்கில் இருந்த பார்த்திபனை கொலை செய்ய வடிவழகன் பாம்பு வினோத்திற்கு உதவி புரிந்துள்ளார். இதனால் தனது கேங்கிற்கும் வடிவழகனுக்குமிடையில் பிரச்சனை ஏற்பட துவங்கியது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 2020 ம் வருடம் வடிவழகன் மற்றும் காராமணி (எ) வினோத் குமார் ஆகிய இருவரும் வெவ்வேறு வழக்குக்களுக்காக சிறை சென்றனர். அப்போது, போது இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட சிறைக்குள்ளேயே அடிதடி வரை சென்றுள்ளது.

இதனால், காராமணி (எ) வினோத் குமார் வடிவழகனை கொலை செய்து விடுவதாக அப்போதே கூறி அதற்கான திட்டத்தையும் சிறை நண்பர்களுடன் சிறையிலேயே வகுத்துள்ளார். வடிவழகனும் சிறையில் ஏற்கனவே குற்ற வழக்குகளில் கைதிகளாக இருந்த வேறு நண்பர்களின் மூலமாக காராமணி (எ) வினோத் குமாரை கொலை செய்ய திட்டம் வகுத்துள்ளார்.

அதன்பின்னர் சிறையிலிருந்து வெளியில் வந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி அதற்கான முயற்சிகளையும் செய்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் வடிவழகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து காராமணி (எ) வினோத்குமார் மீது கொலை முயற்சி செய்துள்ளார் என்பதும் அப்போது காராமணி வினோத் குமார் தப்பியுள்ளார் என கூறப்படுகிறது.

இனி வடிவழகனை உயிருடன் விட்டால் நம்மை கொலை செய்துவிடுவான் என்றும் அதற்குள் நாம் வடிவழகனை கொலை செய்து விட வேண்டும்  என காராமணி வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்கள் திட்டம் போட்டு கொலை முயற்சி செய்து வந்துள்ளனர். ஆனால், வடிவழகன் எப்போதும் தனது நண்பர்களுடன் சேர்ந்து இருப்பதால் காராமணி வினோத்குமார் மற்றும் அவர்களது நண்பர்களால் வடிவழகனை கொலை செய்யமுடியவில்லை.

வடிவழகனை தக்க சமயம் பார்த்து கொலை செய்ய வேண்டும் என்ற நிலையில் காத்திருந்த காராமணி வினோத்குமார் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு நேற்று இரவு வடிவழகன் தனியாக வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் உடனடியாக அங்கு காராமணி வினோத்குமாரும் அவரது நண்பர்களும் வடிவழகனை வெட்டிப்படுகொலை செய்துள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக முன்பொருமுறை சிறைக்குள் பாம்பு வினோத்துக்கும், பார்த்திபனுக்கும் சண்டை வந்த போது, பாம்பு வினோத்துக்கு உதவி செய்வதற்காக தனது நண்பரான பார்த்திபனை, பாம்பு வினோத்துக்கு வடிவழகன் காட்டிகொடுத்தது போல, தற்போது வடிவழகன் தனியாக வரும் தகவலை காராமணி வினோத்குமார் கேங்குக்கு வடிவழகன் கேங்கில் இருந்த ஒரு நபர்தான் கூறியுள்ளார் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சினிமாவை மிஞ்சும் பின்னணி கொண்ட இந்த கொலை சம்பவம் குறித்து சேத்துபட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: