Home /News /tamil-nadu /

கோவையில் 100 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை அபகரிக்க முயற்சி.. பிரபல மருத்துவர் கைது

கோவையில் 100 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை அபகரிக்க முயற்சி.. பிரபல மருத்துவர் கைது

Youtube Video

கோவையை சேர்ந்த மருத்துவர் ராமச்சந்திரன் என்பவரின் 100 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை மோசடியாக அபகரிக்க முயன்றதாக பிரபல மருத்துவர் உமாசங்கர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவமனையை விற்க முயன்றதுதான் கைதுக்கு காரணமா?

    கோவையில் பிரபல மருத்துவமனையை வாடகைக்கு எடுத்த பிரபல மருத்துவர், அதை அபகரிக்க முயன்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவமனைக்குள் புகுந்த ரவுடி கும்பல், அங்கிருந்த நோயாளிகளையும், நர்சையும் வெளியேற்றியதாக கூறப்படுகிறது. உண்மையில் நடந்தது என்ன?

    கோவை காந்திபுரத்தில் இயங்கி வருகிறது எல்லன் என்ற பிரபல மருத்துவமனை. பிரபல மருத்துவரான 72 வயதான ராமச்சந்திரன் இதன் உரிமையாளர் ஆவார். இவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு கொண்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த உமாசங்கர் என்ற மருத்துவர். சென்னை மருத்துவமனை என்ற பெயரில், தான் ஒரு மருத்துமனையை நடத்தி வருவதாக கூறியுள்ள உமாசங்கர், அதன் கிளையை கோவையிலும் தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். ஏற்கெனவே வயது முதிர்வின் காரணமாக மருத்துவமனையை நிர்வகிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த ராமச்சந்திரன், எல்லன் மருத்துவமனை கட்டடத்தை வாடகைக்கு விட ஒப்புக் கொண்டுள்ளார். மாத வாடகை 15 லட்சம் ரூபாயும், 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியும் செலுத்த வேண்டும் எனக் கூறிய ராமச்சந்திரன், ஆண்டுதோறும் 10 சதவீத வாடகை உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

    இதை உமாசங்கர் ஏற்றுக் கொண்டதை அடுத்து, இருவரும் கடந்த 2017 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். அப்போது ஒரு கோடி ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார் மருத்துவர் உமாசங்கர்.

    மேலும், ராமச்சந்திரன் அப்பகுதியில் பிரபல மருத்துவர் என்பதால், பழக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அந்த மருத்துவமனையிலேயே தனியாக ஒரு அறையை ஒதுக்கி தரவும் வாடகைதாரரான உமாசங்கர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, எல்லன் மருத்துவமனையின் பெயரை, சென்னை மருத்துவமனை என மாற்றி நடத்தி வந்த உமாசங்கர், பேசியபடி வாடகை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். 3 ஆண்டுகளாக மருத்துவர் உமாசங்கர் முறையாக வாடகை கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால், 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ராமச்சந்திரனே கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    இதனால், 4 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயை கொடுக்கும் படி உமாசங்கரிடம் ராமசந்திரன் கேட்டுள்ளார். ஆனால், அதை காதில் போட்டுக் கொள்ளாத உமாசங்கர், வேறு ஒருவருக்கு மருத்துவமனையை வாடகைக்கு விடவும் முயற்சித்துள்ளார்.

    இதை அறிந்து அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் அது குறித்து கேட்டபோது, உமாசங்கரும், அவரது மருத்துவமனை மேலாளர் மருதவாணன் என்பவரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர். இதையடுத்து, மருத்துவர் ராமச்சந்திரன் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

    அதில் தனது வயோதிகத்தை பயன்படுத்தி, தன்னை ஏமாற்றி 100 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவமனையை அபகரிக்க முயற்சிப்பதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். அத்துடன் தனக்கு வரவேண்டிய 4.95 கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்து கொடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் வேண்டுகோள் விடுத்தார்.

    மேலும் படிக்க...திருவண்ணாமலையில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்.. கூலிப்படைக்கு ஒரு கோடி ரூபாய் பேரம் பேசி பழிக்கு பழி வாங்கிய மனைவி.. (வீடியோ)

    இதையடுத்து, மருத்துவர் உமாசங்கர் மற்றும் மருதவானன் மீது கொலை மிரட்டல், மோசடி உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், உமாசங்கர் நடத்தி வந்த சென்னை மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்த நபர்கள் சிலர், மருத்துவமனையில் இருந்த ஊழியர்களையும், நோயாளிகளையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக சமூக வலைதளங்களில் சில வீடியோ காட்சிகள் வெளியானது.

     

    மேலும், சென்னை மருத்துவமனை என்ற பெயர் பலகையை எடுத்து விட்டு, எல்லன் மருத்துவமனை என்ற பழைய பெயரிலேயே மருத்துவமனை தற்போது செயல்படத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், உமாசங்கர் ஆட்களே மருத்துவமனைக்குள் நுழைந்து அட்டகாசம் செய்துவிட்டு, அதை ராமச்சந்திரன் தரப்பு செய்ததாக பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதாக வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.

    வாடகை பாக்கி தொடர்பான புகாரில் உமாசங்கர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், எல்லன் மருத்துவமனைக்குள் நுழைந்து, அத்துமீறியவர்கள் யார் என்பது போலீஸ் விசாரித்தால் மட்டுமே தெரியவரும். இதனிடையே, பிரபலமான எல்லன் மருத்துவமனையை அபகரிக்க முயன்ற சம்பவமும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Coimbatore, Crime | குற்றச் செய்திகள், Doctor, Hospital

    அடுத்த செய்தி