திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் சரகத்திற்கு உட்பட்ட கம்பன்கொல்லை தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன். இவர் நாகப்பட்டினத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி தேவி (வயது 31). இவர்களுக்கு குஷாந்த் (வயது 11) என்ற மகனும், ரோஷினி (வயது 10) என்கிற மகளும் உள்ளனர்.
குஷாந்த் ஆறாம் வகுப்பும், ரோஷினி நான்காம் வகுப்பும் படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜெயசீலன் வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கணவரை போனில் தொடர்பு கொண்ட மனைவி நந்தினிதேவி வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். வீட்டில் குடும்ப செலவிற்கு கூடுதல் பணம் தேவைப்படுவதால் தொடர்ந்து வேலை பார்த்துவிட்டு பிறகு வருகிறேன் என ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கணவன் வீட்டுக்கு வர மறுக்கிறார் என மனவேதனை அடைந்த நந்தினி தேவி வீட்டில் இருந்த எலி பேஸ்டை எடுத்து தனது இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து தானும் தின்றுள்ளார். இதனையடுத்து ஒரு நாள் முழுவதும் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவர்களுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் மனைவி வீட்டிற்கு வரவில்லை என்று கோபித்துக் கொண்டார் என்பதால் கணவர் ஜெயசீலனும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த 3 பேரும் வாந்தி எடுத்ததை பார்த்து விசாரித்தபோது எலி பேஸ்டை தின்றது தெரியவந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த ஜெயசீலன் உறவினர்கள் உதவியோடு மூவரையும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நந்தினி தேவைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு குழந்தைகளுக்கும் குழந்தைகள் நலப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து கொரடாச்சேரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : செந்தில்குமரன்
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.