HOME»NEWS»TAMIL-NADU»falling sales of firecrackers also affected the sale of uthupathi flames vai
பட்டாசு விற்பனை சரிவால், ஊதுவத்தி விற்பனையும் பாதிப்பு
தீபாவளி நெருங்கும் வேளையில், பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க பயன்படுத்தப்படும் ஊதுவத்திகளின் விற்பனை மந்தமாக இருப்பதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் வெடிப்பதற்கு மூன்று அடி நீள ஊதுவத்திதான் பலராலும் பயன்படுத்தப்படுகிறது. மரத்தூள் கவலையை கொண்டு தட்டை குச்சியில் தயாரிக்கப்படும் ஊதுவத்தி, பட்டாசு பேக்கேஜில் நிச்சயம் இடம்பெறும். திருச்சியில் தயாரிக்கப்படும் இந்த ஊதுவத்திகள் சென்னை, கோவை, தஞ்சை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
வழக்கம் போல் தீபாவளிக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக ஊதுவத்தி தயாரிக்கும் பணி தொடங்கிய நிலையில், கொரோனா காரணமாக விற்பனை மந்தமாக இருப்பதால் தொழிலாளர்கள் விழி பிதுங்கியுள்ளனர்.
அத்துடன் தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணிவரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கவேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதனால் பட்டாசு விற்பனை முன்புபோல் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம் எனக்கூறும் ஊதுவத்தி தொழிலாளர்கள், தங்களிடம் 10000 ஊதுவத்திகள் வாங்கும் விற்பனையாளர்கள் தற்போது 500, 1000 ஊதுவத்திகளே வாங்கிச்செல்வதாக கூறுகின்றனர்.
வட்டிக்கு பணம் வாங்கி ஊதுவத்தி தயாரிப்பில் இறங்கியதாகவும், தற்போது விற்பனை இல்லாததால் மூலப்பொருட்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் தொழிலாளர்கள் வேதனையோடு கூறுகின்றனர்.