இட ஒதுக்கீடு தீர்ப்பு தொடர்பாக நடிகர் சூர்யா பெயரில் போலி அறிக்கை வெளியிட்ட விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூர்யா சார்பில் 2டி நிறுவனம் புகார் அளித்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பை பாராட்டி அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட்டன. இந்நிலையில் நடிகர் சூர்யா பெயரிலும் அறிக்கை ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த அறிக்கையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இந்த தீர்ப்பு கொங்கு மண்ணைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவை நனவாக்கும் என்றும் இதற்காக முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறி நடிகர் சூர்யாவின் கையெழுத்தும் இருந்தது.
இந்த அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சூர்யா சார்பில் 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகரபாண்டியன் தனது டிவிட்டரில் சூர்யா பெயரில் போலியான அறிக்கை உலாவி வருவதாகவும், அந்த அறிக்கையை புறக்கணிக்குமாறும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா சார்பில் 2டி நிறுவனத்தின் துணை தலைவர் மனோஜ் தாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் சூர்யா பெயரில் போலி அறிக்கை வெளியிட்ட விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: புறநகர் ரயிலில் பயணம் செய்பவர்கள் ரூ.500 அபராதத்தை தவிர்க்க மறக்காம இதை கொண்டு போங்க
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.