வேலூரில் குற்றவாளியை தேட சென்ற இடத்தில் போலி மதுபான ஆலை இருப்பது அம்பலமானது

Youtube Video

வேலூர் அருகே, குடும்பத் தகராறில் மைத்துனரைக் கத்தியால் குத்திய அக்கா கணவரைப் பிடிப்பதற்காக போலீசார் வீட்டிற்கு சென்றபோது அங்கு போலி மதுபானம் தயாரிக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. எரிசாராயம் முதல், பாட்டில் மூடி வரை போலீசார் அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். வீட்டிலேயே மதுபான ஆலை செயல்பட்டது எப்படி?

 • Share this:
  வீட்டிலேயே போலி மதுபான ஆலை நடத்தி வந்துள்ளார் சதீஷ்குமார்; குடும்பத் தகராறில் போலீசார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது போலி மதுபான ஆலை இருப்பது அம்பலமாகியுள்ளது. சதீஷ்குமார் சிக்குவாரா?

  வேலூர் அருகே உள்ள சாத்துமதுரையைச் சேர்ந்தவர் 36 வயதான சதீஷ்குமார், மேஸ்திரி வேலை செய்து வருகிறார். வியாழன் அன்று சதீஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மைத்துனர் 22 வயதான சந்துரு, சதீஷிடம் தட்டிக் கேட்டுள்ளார்; அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் உச்சத்தில், சதீஷ்குமார் கத்தியால் சந்துருவின் வயிற்றில் குத்தி விட்டு தப்பியோடி விட்டார்.

  சந்துரு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரிக்க வேலூர் தாலுகா போலீசார் சதீஷின் வீட்டிற்கு சென்றனர். சதீஷ் இல்லாத நிலையில் வீட்டிற்கு வெளியே ஒரு மூட்டை கிடந்ததைப் பார்த்து போலீசார் சந்தேகமடைந்தனர். அதைத் திறந்து பார்த்தபோது புதிய மதுபாட்டில்கள் இருந்தன.

  இதையடுத்து போலீசார் வீட்டிற்குள் புகுந்து சோதனையிட்ட போது, மதுபானம் தயாரிப்பதற்கான எரிசாராயம், அதில் பயன்படுத்தக் கூடிய ரசாயன நிறமூட்டிகள், பாட்டில் மூடியைப் பொருத்தும் இயந்திரம், பாட்டிலில் ஒட்டும் ஸ்டிக்கர்கள் ஆகியவை இருந்துள்ளன. மேலும், 450 மதுபாட்டில்கள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் இருந்தன. அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சதீஷ்குமாரைத் தேடி வருகின்றனர்.

  மேலும் படிக்க.. திமுக வேட்பாளர் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்பதற்காக மட்டும் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்: திருச்சியில் ஆ.ராசாவின் ஆவேச பேச்சு

  தேர்தலை முன்னிட்டு சதீஷ்குமார் போலி மதுபானங்களைத் தயாரித்து அதிக விலைக்கு விற்கத் தயாராக இருந்த நிலையில் போலி மதுபானங்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளன.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: