HOME»NEWS»TAMIL-NADU»fake certificate at ias exam training center run by tamil nadu government crime video vai

அரசு ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் போலியான சான்றிதழ்… இளைஞர் சிக்கியது எப்படி?

தமிழக அரசு நடத்தும் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையத்தில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றதாக போலியான சான்றிதழ் தயாரித்து பயிற்சி மையத்தில் படித்து வந்ததாக இளைஞர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலி சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

  • Share this:



ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் கடந்த 2 மாதங்களாக தங்கியிருந்து இலவசமாக படித்து வந்த ராஜ்மஸ்தான் என்ற இளைஞர், போலி சான்றிதழ் விவகாரத்தில் சிக்கியுள்ளார். போலி சான்றிதழ் தயாரித்தது எப்படி?

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு தயாராகும் மாணவ மாணவியருக்காக, 1967 ம் ஆண்டிலிருந்து அகில இந்திய குடிமைப்பணி தேர்வு இலவச பயிற்சி மையத்தை சென்னை கிரீன் வேஸ் சாலையில் தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த இலவச பயிற்சி மையத்தில் சேர்வதற்கு தனி நுழைவு தேர்வுகளை இந்த பயிற்சி மையம் நடத்தும். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அங்கு இலவசமாக தங்கி படிக்க முடியும்.



இதுமட்டுமில்லாமல் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அல்லது மெயின் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காண்பித்து இந்த பயிற்சி மையத்தில் இலவசமாக தங்கி பயிற்சி பெறலாம்.

கடந்த நவம்பர் மாதம் 11 ம் தேதி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றதாக கூறி, வேலூர் காட்பாடியை சேர்ந்த ராஜ் மஸ்தான் என்ற இளைஞர் ஒரு சான்றிதழை காண்பித்து பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி்க்கு சேர்ந்தார்.

ராஜ் மஸ்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்ட படிப்பை முடித்து இருப்பதாகக் கூறி அதற்கான ஆவணங்களையும் சான்றிதழ்களையும் பயிற்சி மையத்தில் கொடுத்து சேர்ந்தார். இலவச பயிற்சி மையத்தில் தங்கி படிக்கும் மற்ற மாணவர்களுக்கு ராஜ் மஸ்தான் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் நிலைத் தேர்வில் ராஜ் மஸ்தான் கலந்துகொள்ளாமல் பயிற்சி மையத்தின் அறையிலேயே இருந்துள்ளார். இதுகுறித்து சக மாணவர்கள் பயிற்சி மையத்தின் வார்டனுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் ராஜ் மஸ்தானிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போதுதான், ராஜ் மஸ்தான் ஏற்கனவே நடந்து முடிந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர் ஒருவரின் பதிவு எண்ணை எடுத்து போலியாக முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தயாரித்து தனது சான்றிதழ் போல கொடுத்தது தெரியவந்துள்ளது.

மேலும், இதே போன்று அடுத்து நடக்க உள்ள சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் அவர் போலியாக தயாரித்து வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தின் இயக்குனர் தங்கராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க...Joe Biden | அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்

ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தீட்சாவும் அவரது தந்தையும் சேர்ந்து இதேபோல் போலி சான்றிதழ்கள் தயாரித்து போலீசாரிடம் சிக்கியுள்ள நிலையில், ஐஏஎஸ் தேர்வுக்குப் படிப்பதற்கும் ஒரு இளைஞர் போலி சான்றிதழ் தயாரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: