இனிய குரலில் பேசும் பெண்கள்... கடன் வாங்கி தருவதாக போலி கால்சென்டர் மூலம் நூதன மோசடி!

குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் ஒரே வாரத்தில் கடன் பெற்றுத்தரப்படும் என்று அந்த பெண்கள் இனிக்க இனிக்க பேசுவார்கள்.

இனிய குரலில் பேசும் பெண்கள்... கடன் வாங்கி தருவதாக போலி கால்சென்டர் மூலம் நூதன மோசடி!
  • Share this:
வங்கிகளில் கடன் வாங்கித்தருவதாக கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி மெகா மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கொண்ட கும்பல் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போன் மூலம் மோசடி செய்தது எப்படி?

செல்போனில் தொடர்பு கொண்டு இனிய குரலில் பெண்கள் பேசுவார்கள். 'உங்களுக்கு கடன் உதவி தேவைப்பட்டால்' குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் ஒரே வாரத்தில் கடன் பெற்றுத்தரப்படும் என்று அந்த பெண்கள் இனிக்க இனிக்க பேசுவார்கள். அந்த பேச்சை உண்மை என்று நம்பி கடன் உதவி தேவைப்படுகிறது என்று சொன்னால், உடனே ஆன்லைன் மூலம் விண்ணப்ப மனுக்களை அனுப்பி வைப்பார்கள்.


அந்த விண்ணப்ப மனுக்களை நீங்கள் பூர்த்தி செய்து அனுப்பியவுடன் நீங்கள் கேட்கும் கடன் தொகைக்கு ஏற்ப உங்கள் வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை 'டெபாசிட்' செய்ய சொல்வார்கள். அடுத்த கட்டமாக உங்கள் ஆதார் எண்ணை கேட்பார்கள். இதை தொடர்ந்து வங்கி ஏ.டி.எம். கார்டின் ஓ.டி.பி. எனப்படும் ரகசிய குறியீட்டு எண்ணையும் கேட்பார்கள்.

ரகசிய குறியீட்டு எண்ணை கொடுத்தவுடன் நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் செலுத்திய பணத்தை ஆன்லைன் மூலமாக எடுத்து விடுவார்கள். ஆனால் உங்களுக்கு வங்கி கடனும் கிடைக்காது. கடன் கிடைக்கும் என்ற ஆசையில் நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் செலுத்திய பணமும் பறிபோகிவிடும். இது போன்ற ஒரு மெகா மோசடியை பொதுமக்களை ஏமாற்றி சமீபகாலமாக சென்னையில் ஒரு கும்பல் அரங்கேற்றி வந்தது.

மோசடி கும்பல் சிக்கியது எப்படி?மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்த பொது மக்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுக்களை கொடுத்த வண்ணம் இருந்தனர். ஒரே வாரத்தில் 100 பேர் 25 லட்சம் ரூபாய் வரை மோசடி கும்பலிடம் ஏமாந்து போய் விட்டதாக புகார்களை அளித்தனர்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணையை தொடங்கினர். போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

வங்கிகளில் கடன் வாங்கித்தருவதாக பொது மக்களிடம் ஆசைக் காட்டி போனில் பேசி பணத்தை சுருட்டி வந்த மோசடி கும்பல் சென்னை சிட்டலப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அலுவலகம் வைத்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் போலியான கால் சென்டர் ஒன்று இயங்கி வந்தது. அங்கு 5 பெண்கள் பணி செய்தனர். அவர்கள் தான் பொது மக்களிடம் செல்போனில் இனிமையாக பேசி வங்கி கடன் ஆசைக்காட்டி மோசடிக்கு துணை போனவர்கள் என தெரியவந்தது.

மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் மோசடி கும்பல் நடத்திய கால் சென்டரிலும், அலுவலகத்திலும் திங்கட்கிழமை திடீர் சோதனை நடத்தினர். போலீசார் நடத்திய சோதனையில் சுமார் 1,500 பேரிடம் விண்ணப்ப மனுக்களை வாங்கி, வங்கி கடன் வாங்கி தருவதாக அவர்களது கணக்கில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டியிருப்பது தெரியவந்தது.

உடனடியாக கால் சென்டரில் வேலை பார்த்த 5 பெண்கள் உட்பட மோசடி கும்பலை சேர்ந்த 12 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட மணிகண்டன் தான் மோசடி கும்பலின் தலைவனாக செயல்பட்டுள்ளார். 9ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு மோசடி கும்பலிடம் வேலை பார்த்துள்ளதாகவும், அந்த அனுபவத்தில் மணிகண்டன் தானே அந்த தொழிலை செய்ய தொடங்கியது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டுள்ள 5 பெண்களும், விளம்பரத்தை பார்த்து மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலையில் சேர்ந்ததும் தெரியவந்தது. தங்கள் மகள்கள் மோசடி நிறுவனம் என தெரியாமல் வேலைக்கு சேர்ந்துவிட்டதாக கைதான பெண்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Watch

First published: October 16, 2019, 7:55 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading