ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் 8 போலி வங்கிகள் நடத்தி பொதுமக்களிடம் மோசடி : சிக்கிய முக்கிய குற்றவாளி!

தமிழகத்தில் 8 போலி வங்கிகள் நடத்தி பொதுமக்களிடம் மோசடி : சிக்கிய முக்கிய குற்றவாளி!

சந்திர போஸ்

சந்திர போஸ்

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் செயல்பட்டு வந்த போலி வங்கியின் கிளைகள் முடக்கப்பட்டது 

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகம் முழுவதும் 8 போலி வங்கிகள் நடத்தி பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலியான வங்கி தொடங்கி அதன் மூலம் விவசாயிகள் மற்றும் தொழில் தொடங்குவோரை தொடர்ச்சியாக ஒரு கும்பல் ஏமாற்றி வருவதாக ஆர்.பி.ஐ உதவி பொது மேலாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு  - வங்கி மோசடி புலனாய்வு துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது அம்பத்தூர், லேடான் தெரு, VGN Brent Park என்ற இடத்தில் இயங்கி வந்த ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி (Rural and Agriculture Farmers Co operative Bank (RAFC Bank)) இயங்கி வருவது தெரியவந்தது. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது போன்று அனுமதி சான்றிதழ் போலியாக உருவாக்கி வைத்துக்கொண்டு போலியாக வங்கி நடத்தி வந்தது தெரிய வந்தது.

போலீசாரின் தொடர் விசாரணையில் 8 இடங்களில்  ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி என்ற பெயரில் போலியான வங்கி ஆரம்பித்து நூற்றுக்கணக்கான ஊழியர்களுடன் செயல்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இந்தப் போலி வங்கிகளை உருவாக்கி அதன் தலைவராக இருந்து வந்த சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் சேர்ந்த சந்திர போஸ் என்பவரை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அம்பத்தூர், மதுரை, ஈரோடு, திண்டுக்கல், விருதாசலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட எட்டு பகுதிகளில் எட்டு கிளைகள் அமைத்து ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி என்ற பெயரில் போலியான வங்கி கிளைகளை உருவாக்கி 6.5% வட்டியுடன் விவசாயிகளுக்கு கடன் கொடுத்து பின் அதிரடியாக அவற்றை வசூலித்தும் பல்வேறு மோசடி வழிகளில் விவசாயிகளிடம் மோசடி செய்தும் வந்துள்ளனர்.

வங்கியில் பணிபுரிய விருப்பம் உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களிடம் ரூபாய் 2 லட்சத்திலிருந்து 7 லட்சம் வரை பணம் பெற்று எட்டு கிளைகளிலும் உயர் அதிகாரிகளாக பணியமர்த்தி அவர்களுக்கும் கீழ் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிக்கு அமர்த்தி போலி வங்கிகளை செயல்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.

பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகை, சேமிப்பு தொகை ஆகியவற்றை பெற்றும் நகைகளுக்கு அதிக வட்டி தருவதாகவும், நிரந்தர வைப்புத் தொகைகளை பெற்றும் மோசடி செய்து வந்தது தெரியவந்தது.

ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி என்ற போலி வங்கி கணக்குகள் அனைத்தும் பல்வேறு வங்கிகளுடன் இணைக்கப்பட்டு பணப்பரிவர்த்தனை நடந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக அதிக அளவு பணப்பரிவர்த்தனையானது ஐசிஐசிஐ வங்கியுடன் நடந்துள்ளதும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் எம்.பி.ஏ படித்து அங்கேயே வங்கி துறையில் பணிபுரிந்து வந்த சந்திரபோஸ் அந்த அனுபவ அறிவோடு சென்னை வந்து பொதுமக்களை ஏமாற்ற போலி வங்கி தொடங்கியதும் அதற்காக வங்கி பணப்பரிவர்த்தனைக்கான மென்பொருள், பில்லிங் மெஷின், பாஸ்புக் மெஷின் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்கி அதன் மூலம் வங்கி செயல்பாடுகளை நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக அம்பத்தூர் கிளையில் மட்டும் ரூபாய் 2 கோடி வரை இதுவரை பொதுமக்களிடம் இருந்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மீதமுள்ள ஏழு கிளைகளில் எவ்வளவு மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் விசாரணையில் கடந்த ஒரு ஆண்டாக போலி வங்கிகள் நடத்தி அதன் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டு இருப்பதும், சமூகவலைதளங்கள் மற்றும் இணைய தளம் அமைத்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு வலை விரித்திருப்பதும் தெரியவந்தது. ஒவ்வொரு வங்கி கிளைக்கும் ஒரு ஆண்டுக்குள்ளேயே சுமார் ஆயிரத்திற்கு அதிகமான வாடிக்கையாளர்களை இந்த வகையில் சந்திர போஸ் சேர்த்து வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதுவரை சுமார் 3000 வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், எட்டு கிளைகளில் மொத்தமாக மோசடி செய்த தொகை எவ்வளவு? எந்தெந்த வங்கிகள் மூலம் எவ்வளவு பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தலை மறைவாக உள்ள சந்திர போஸின் கூட்டாளிகள் மற்றும் போலி வங்கி நிர்வாகிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்திரபோஸிடமிருந்து போலி பாஸ்போர்ட்டுகள், போலி பிரின்டிங் மெஷின், போலி பதிவு சான்றிதழ்கள், போலி முத்திரைத்தாள்கள், போலி அரசு முத்திரைகள் மற்றும் விலை உயர்ந்த பென்ஸ் கார் மற்றும் ரொக்கம் ரூ.57 லட்சம் என போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் இன்னும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் மோசடி செய்யப்பட்ட தொகையின் அளவு மிகபெரிய அளவில் இருக்கலாம் எனவும் சென்னை காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Published by:Lakshmanan G
First published:

Tags: Crime News