திண்டுக்கல்லில் தங்கப் புதையல் ஆசை காட்டி ரூ.22 லட்சம் பறித்த ஜோதிடர் கைது...

Youtube Video

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தங்கப் புதையல் எடுத்து தருவதாக ஆசை காட்டி, நிர்வாண பூஜை நடத்தி ரியல் எஸ்டேட் அதிபரிடம் 22 லட்சம் ரூபாய் மற்றும் 45 சவரன் நகைகளை கொள்ளையடித்த போலி ஜோதிடரைப் போலீசார் கைது செய்துள்ளனர். போலி ஜோதிடர் சிக்கியது எப்படி?

 • Share this:
  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அரியபுத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 51 வயதான தங்கவேல்; ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளார். தொழிலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நண்பர் மூலம், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் கிராமத்தைச் சேர்ந்த 51 வயதான ஜோதிடர் சசிகுமாரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

  தங்கவேலின் வீட்டிற்கு வந்த சசிகுமார், அவரிடம் இருந்து பணத்தை சுருட்ட திட்டமிட்டு, தான் ஜோதிடர் அல்ல எனவும், பூஜைகள் மூலம் தங்கப் புதையல்களை எடுப்பவன் எனவும் அளந்து விட்டுள்ளார். அதை நம்பிய தங்கவேலிடம் திருப்பூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் ஒரு பெண்ணின் தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும் அதை எடுக்க பூஜைகள் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். அந்தப் புதையலை எடுத்து வந்து தங்கவேல் வீட்டில் வைத்து 6 மாதம் பூஜை செய்தால், மேலு்ம சில தங்கப் புதையல்கள் கிடைக்கும் என்று புருடா விட்டுள்ளார் சசிகுமார்.

  பூஜைகள் நடத்துவதாகக் கூறி தங்கவேலிடம் இருந்து ஒவ்வொரு முறையும் பல லட்சம் ரூபாய் கறந்துள்ளார் சசிக்குமார். திருப்பூரில் இருந்து எடுத்து வந்ததாகக் கூறி, தங்கக் காசுகள் இருந்த ஒரு பானையை வைத்து தங்கவேல் வீட்டில் பூஜைகளை நடத்தியுள்ளார் சசிகுமார்.

  தன்னை அவர்கள் நம்புவதற்காக பானையில் இருந்து ஒரு தங்கக் காசை எடுத்து தங்கவேல் குடும்பத்தினரிடம் கொடுத்து அது உண்மையான தங்கக் காசா என பரிசோதிக்கும்படி கேட்டுக் கொண்டார் சசிக்குமார். அவர்களும் அதை சோதித்துப் பார்த்ததில் உண்மையான தங்கக் காசாக இருக்கவே சசிகுமாரை முழுமையாக நம்பத் தொடங்கியுள்ளனர்.

  இதற்கிடையே தங்கப் புதையல் எடுத்து தருவதாகக் கூறி தங்கவேல் மனைவி, மாமியாரிடம் தனியாகப் பேசி 45 சவரன் நகைகளையும் வாங்கிக் கொண்டார் சசிகுமார். மேலும், புல்லட் பைக், ஒரு கார், செல்போன் ஆகியவற்றையும் வாங்கித் தரும்படி கேட்டு வாங்கிக் கொண்டார். இப்படி பல மாதங்கள் ஆன பின்னும் எந்தத் தங்கப் புதையலையும் சசிகுமார் கண்ணில் காட்டவில்லை.

  மேலும் படிக்க... மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

  இந்த நிலையில் ஒருநாள் சசிகுமார், தங்கவேலை எப்படி ஏமாற்றுவது என காரில் சென்றபோது ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஓட்டுநர் செல்போனை அணைக்காமல் இருக்கவே, அப்போது அழைத்த தங்கவேல் அவர்கள் பேசியது அனைத்தையும் கேட்டுள்ளார்.  எச்சரிக்கையடைந்த தங்கவேல், உடனடியாக மாவட்ட எஸ்பி ரவளி பிரியாவிடம் புகாரளித்தார். புகாரின் பேரில் சசிகுமார் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் தங்கப் பானை என்ற பெயரில் நடத்திய மோசடி நாடகம் அம்பலத்தி்ற்கு வந்தது. சசிகுமாரிடம் இருந்து கார், புல்லட் பைக், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: