கோவையில் உள்ள பிரபல ஆதியோகி சிவன் சிலை அருகே ஆண் யானை ஒன்று ஜனவரி 5-ம் தேதி இறந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியை சுற்றுச்சூழல் ஆர்வலரான சுந்தர்ராஜன் போன்றோரும் தங்களது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், மறுபுறம் இது தவறான செய்தி என பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த செய்தியின் உண்மை தன்மை என்ன என்பதை இதில் பார்ப்போம்.
குற்றச்சாட்டு 1 : ஈஷாவின் ஆதியோகி சிவன் சிலை அருகில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை இறப்பு
உண்மை: ஆண் யானை இறந்தது உண்மை. ஆனால், அது ஆதியோகி அருகே இறக்கவில்லை. இதற்கும் ஈஷாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தொண்டாமுத்தூர் பகுதியில் இருக்கும் குளத்தேரி என்ற இடத்தில் விவசாயி துரை என்பவர் சட்டத்திற்கு புறம்பாக அதிக மின் அழுத்த மின்வேலியை அமைத்திருந்தார். அதில் சிக்கி யானை உயிரிழந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகள் இத்தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான செய்திகள் தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமலர், தினதந்தி, தினமணி, ஏ.என்.ஐ உள்ளிட்ட பல்வேறு பிரதான வெளியாகி உள்ளன.
குற்றச்சாட்டு 2: ஈஷாவைச் சேர்ந்த சிலர் அந்த யானையை 3 நாட்களாக துறத்தினர்.
உண்மை: இந்த குற்றச்சாட்டும் பொய்யானது. இந்த குற்றச்சாட்டு குறித்து தி நியூஸ் மினிட் என்ற ஆங்கில ஆன்லைன் ஊடகத்திற்கு கோவை மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷனுடன் தெளிவாக பதில் அளித்துள்ளார். அதில், “இறந்த யானையை பொதுமக்களோ, ஈஷாவைச் சேர்ந்தவர்களோ யாரும் துறத்தவில்லை. அப்படி துறத்துவும் முடியாது. உள்ளூர் மக்கள் யானையை துறத்தினால் அது திரும்பி வந்து தாக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும். யானையை துறத்தும் பணியில் எங்களுடைய வனத்துறை குழுவினர் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து வனத்துறை அதிகாரியின் விளக்கம் மற்றும் ஊடக செய்திகளின் அடிப்படையில் யானை இறந்த விவகாரத்தில் ஈஷா மீதான குற்றச்சாட்டுகள் தவறானது என்று தெரியவருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்