வங்கக்கடலில் உருவான நிவர், புரெவி புயல்களுக்குப் பிறகு, தற்போது இந்திய பெருங்கடலின் அமைதியைக் குலைக்க, அர்னாப் புயல் ஏற்படவிருப்பதாக செய்திகள் பரவுகின்றன. ஆனால் உண்மை என்ன ?
கடலில் உருவாகும் புயல்களுக்கு ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து பெயர்களை வைக்கும் முறை பின்பற்றுகின்றனர். அந்த வகையில் இந்தியப் பெருங்கடலில் உள்ள வங்கக் கடல், அரபிக் கடல்களில் உருவாகும் புயல்களுக்கு இந்த பகுதிகளில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து, ஈரான், சவுதி அரேபியா, கத்தார், ஏமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 13 நாடுகள் சேர்ந்து பெயர் பட்டியலை வெளியிடுகின்றன. அவற்றில் வரிசைப்படி பெயர்கள் சூட்டப்படுகின்றன.
இந்தப் பட்டியலில் 13 உறுப்பு நாடுகளுக்கு தலா 13 புயல் பெயர்கள் என மொத்தம் 169 பெயர்களை உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கான பெயர்களில் முரசு, நீர், உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வரிசையில், அர்னாப் என்னும் புயலின் பெயர் வங்கதேசத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 13 நாடுகளால் பரிந்துரைக்கப்படும் புயலின் பெயர்களில் இதுவும் ஒன்று.
புயலின் தாக்கம் மற்றும் தேதிகளைக் கடந்து, 13 நாடுகளால் புயலுக்கு வைக்கப்படும் பெயர்களும், அந்த பெயர்களின் பின்னுள்ள காரணங்களும், வரலாறும் ஒரு வித சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அர்னாப் என்ற பெயர் இந்தியாவில் பிரபலமான ஊடகவியலாளர் பெயர் என்பதால் இணையத்தில் கவனம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
அதேபோல், இந்த அர்னாப் பெயரிலான புயல் வர இன்னும் எத்தனையோ பெயர்களை (புயல்களை) கடக்க வேண்டியுள்ளதால், அடுத்த புயலுக்கு பெயர் அர்னாப் புயல் அல்ல என்பதை தெளிவுப்படுத்துகிறோம்.

புயல்களின் பெயர்கள்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.