முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் பரோல் முடிந்து இன்று சிறைக்கு செல்ல இருந்த நிலையில் அவருக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். சிறுநீரகத் தொற்று மற்றும் வயிறு சம்பந்தமான பாதிப்புகள் காரணமாக பரோல் வழங்க வேண்டி அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் தமிழக முதலமைச்சருக்கு மனு அனுப்பியிருந்தார். மனுவை பரிசீலித்த முதல்வர் 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 28ஆம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த காவலுடன் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு பலத்த காவலுடன் சென்று கையெழுத்திட்டு வந்தார். மேலும் டாக்டர்ககளின் ஆலோசனைப்படி கிருஷ்ணகிரி, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாதமும் மீண்டும் பரோல் நீட்டிக்க கோரி தமிழக அரசுக்கு மனு அளித்து வந்தார். அதன்படி 5 முறை பரோல் நீட்டிக்கப்பட்டு இன்றுடன் (நவம்பர் 25) முடிந்து சென்னை புழல் சிறைக்கு பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட இருந்தார்.
Must Read : தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்.... இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை
இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மேலும் பரோல் நீட்டிக்க மனு அனுப்பி இருந்தார். அதனை பரிசீலித்த தமிழக அரசு பேரறிவாளனுக்கு 6ஆவது முறையாக மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.