கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆனபோதிலும், அது புதிதாக உருமாறி மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது. இதற்கு எதிராக பலன் அளிக்கக் கூடிய ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் தற்போது பூஸ்டர் டோஸின் அவசியம் குறித்து மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உலகில் பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், இஸ்ரேல், பிரான்ஸ், தென் கொரியா, தாய்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பூஸ்டர் டோஸ் போடுகின்றனர். இரண்டாவது டோஸ் போட்டு முடித்து ஆறு மாத காலத்துக்கு பிறகே பூஸ்டர் டோஸ் போட முடியும். ஒமைக்ரான் உருமாறிய கொரோனா உலகம் எங்கும் பரவும் பிரதான வைரஸாக மாறி வரும் நிலையில் ஆறு மாத கால இடைவெளியை சில நாடுகள் தற்போது குறைத்துள்ளன.
இந்தியாவில் 213 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இது வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. 48 பேருக்கு செய்யப்பட்ட மரபணு பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவுள்ளன.
பூஸ்டர் டோஸ் என்றால் என்ன?
இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இரண்டு முறை செலுத்த வேண்டியவை. இதன் மூலம் நோய்க்கு எதிராக கிடைக்கும் எதிர்ப்பு சக்தி சில காலத்தில் மங்கி விடுகிறது. எனவே எதிர்ப்பு சக்தியை மீண்டும் அதிகரிக்க பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது.
உலகில் உள்ள பல்வேறு தடுப்பூசிகள் பொதுவாக ஆறு மாத காலம் நல்ல பாதுகாப்பு தருவதாகவும் அதன் பின் நோய் வராமல் தடுப்பதிலும் நோய் வந்தால் தீவிர பாதிப்பிலிருந்தும் குறைவான பாதுகாப்பையே தருவதாகவும் உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் கூறுகிறார்.
Also read... 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் சுணக்கம்
இந்தியாவில் கோவிஷீல்டு என்று பயன்படுத்தப்படும் ஆஸ்ட்ரா செனகா ( Astra Zeneca) நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை ஸ்காட்லேந்தில் 2 மில்லியன் மக்களிடமும் மற்றும் பிரேசில் நாட்டில் 42 மில்லியன் மக்களிடமும் ஆய்வுக்கு உட்படுத்தி அதன் முடிவுகள் Lancet சர்வதேச மருத்துவ இதழில் வெளி வந்துள்ளன. இரண்டாவது டோஸ் செலுத்தி ஐந்து மாதங்களுக்கு பிறகு தீவிர பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. " இரண்டாவது டோஸ் செலுத்திய உடன் 90% ஆக இருந்த பாதுகாப்பு ஐந்து மாதங்களில்
40 முதல் 60% ஆக குறைகிறது. தீவிர பாதிப்புக்கு எதிராகவும் பாதுகாப்பு குறைகிறது. எனவே இரண்டு டோஸ் மட்டுமே முழு பாதுகாப்பு தரும் என நம்பிக் கொண்டு இருப்பது கவலையளிக்கிறது." என தொற்று நோய் நிபுணர் சுப்ரமண்யன் சுவாமிநாதன் தெரிவிக்கிறார்.
Also read... அறநிலையத்துறை ஒத்துழைக்காவிட்டால் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க முடியாது - உயர் நீதிமன்றம்
பூஸ்டர் டோஸ் வழங்கும் போது நோய் பாதிப்பு யாருக்கு தீவிரமாக வாய்ப்புள்ளதோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும் என மருத்துவர் அமலோர்பாவநாதன் கூறுகிறார். " 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முதியவர்களில் இணை நோய்கள் உள்ளவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோரை கொரோனா தாக்கினால் ஆபத்து அதிகமாகும்.
எனவே அவர்களுக்கு முதலில் பூஸ்டர் டோஸ் வழங்க வேண்டும். அதே போன்று குழந்தைகளுக்கும் தடுப்பூசி அவசியம். அவர்களுக்கு ஊசியில்லாமல் spray அல்லது வேறு வகையில் தடுப்பு மருந்து செலுத்தினால் பக்க விளைவுகளை குறைக்கலாம்" என்றார்.
தடுப்பூசி பற்றாக்குறை இல்லாத இந்நேரத்தில் கண்டிப்பாக பூஸ்டர் டோஸ் செலுத்த தொடங்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
PTC- உலகம் முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்துவது பற்றி பேசிக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்நாட்டில் இன்னும் 95 லட்சம் பேர் உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் செலுத்தவில்லை என்பது மிகவும் கவலைக்குரியதாகும். தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கும் வைரஸை எதிர்த்து போராட நம் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதை உணர்ந்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதி அறிவுறித்துகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Covid-19 vaccine, Omicron, Vaccine