எண்ணெய் கசிவு விபத்துகளை கட்டுப்படுத்துவதில் போதாமை - ஓ.என்.ஜி.சி மீது நிபுணர் குழு குற்றச்சாட்டு

எண்ணெய் கசிவு விபத்துகளை கட்டுப்படுத்துவதில் போதாமை இருப்பதாக ஓ.என்.ஜி.சி. மீது பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு குற்றம்சாட்டியுள்ளது.

எண்ணெய் கசிவு விபத்துகளை கட்டுப்படுத்துவதில் போதாமை - ஓ.என்.ஜி.சி மீது நிபுணர் குழு குற்றச்சாட்டு
மாதிரி படம்
  • Share this:
டெல்டா மாவட்டங்களில் பல ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தையடுத்த கீழ எருக்காட்டூர் பகுதியில், செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான பருத்தி விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு வயலில் கச்சா எண்ணெய் கசிந்தது.

ஓ.என்.ஜி.சி நிறுவனம் மூலம் அங்குள்ள விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டு அருகில் உள்ள வெள்ளக்குடி பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கில் அவை சேமிக்கப்பட்டு வருகின்றன.

குழாயில் ஏற்பட்ட கசிவால் தனது 2 ஏக்கர் நிலம் பாழ்பட்டதாக விவசாயி செல்வராஜ் குற்றம் சாட்டியிருந்தார்.  மேலும் இந்தாண்டு  ஏப்ரல் 30-ம் தேதி அன்று, திருவாரூர்  மாவட்டம்  புலிவலம் வடக்குத் தெருவில் உள்ள ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய் - எரிவாயு எடுக்கும் கிணற்றிலிருந்து பெரும் வெடிச்சத்தத்துடன் எரிவாயு வெளியேறியது.


தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் மேற்கொண்டு வாயுக் கசிவு நிகழாமல் தடுத்தனர்.

இந்த இரண்டு விபத்துகள் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த மே 11-ம் தேதி தாமாக முன்வந்து வழக்காக எடுத்து அரசு அதிகாரிகள் , வேளாண் மற்றும் அறிவியல் துறை நிபுணர்கள் உள்ளடக்கிய 10 பேர் கொண்ட குழுவை நியமித்தது.

இந்த குழுவானது கடந்த ஜூன் 30-ம் தேதி காணொளி வாயிலாக கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த கூட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் இரண்டு விபத்துகள் குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கியது.இந்தாண்டு ஏப்ரல் மாதம் புலிவலத்தில் நடந்த விபத்தில் உடைப்பு ஏற்பட்ட 2.1 கிலோமீட்டர் தூரத்திற்கு பாதிக்கப்பட்ட குழாய் மாற்றப்பட்டது. நில உரிமையாளருக்கு இழப்பீடாக 10,868 ரூபாய் வழங்கப்பட்டது என்றும் கடந்தாண்டு கீழ எருக்காட்டூரில் நடந்த விபத்தில் விளை நிலத்தில்  ஒன்றரை மீட்டர் ஆழத்தில் 4 டிராக்டர் அளவிற்கு மாசடைந்த மண் அகற்றப்பட்டது.

நில உரிமையாளருக்கு 50,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நிலத்தை மறு சீரமைப்பு செய்ய ஒப்பந்தம் போடப்பட்டு கொரோனா ஊரடங்கின் காரணமாக பணிகள் தொடங்காமல் உள்ளதாகவும், சேதமடைந்த 7.5 தூரத்திற்கான குழாய் மாற்றப்பட்டதாக ஓ. என்.ஜி.சி விளக்கமளித்தது.

இந்த விளக்கம் குறித்து ஆலோசனை நடத்திய நிபுணர் குழு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் எண்ணெய் குழாய் கசிவை கட்டுப்படுத்த ஓ.என்.ஜி.சி. மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.

நிலத்தில் 2மீ ஆழத்தில் பதிக்கப்பட்ட குழாயில் வெடிப்பு ஏற்பட்டு வயல்வெளியில் எண்ணெய் கசிந்த பிறகே விபத்து ஏற்பட்ட விஷயம் ஓ.என்.ஜி.சிக்கு தெரிய வந்துள்ளது.

குழாயில் எண்ணெயின் ஓட்டத்தில் ஏற்படும் சீரற்ற நிலையை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் போதுமானதாக இல்லை என்பதால் மிகச் சரியாக எந்த இடத்தில் கசிவு ஏற்பட்ட்டது என்பதை கண்டறிய முடியவில்லை.

குழாயினுள் எண்ணெயின் ஓட்டம் சீராக உள்ளதா என்பதை அறியும் மீட்டர்கள் அதிகமாக பொருத்த வேண்டும். குழாயினுள் வெடிப்பு, அரிப்பு உள்ளிட்டவற்றை கண்டறிய குறிப்பிட்ட கால அளவில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும்.

Also read... சாத்தான்குளம் வழக்கை விசாரித்த 4 அதிகாரிகளுக்கு கொரோனா - மதுரை சிபிஐ அலுவலகம் மூடல்

குழாயின் வெளிப்புறம் ஏற்படும் அரிப்பத் தடுக்க உரிய பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும். எண்ணெய் குழாய்கள் சுத்தப்படுத்தப்படுவதற்கான ஆதாரங்களை ஓ.என்.ஜி.சி. விரைவில் சமர்பிக்க வேண்டும். குழாய்களை அரிப்பில் இருந்து பாதுகாக்க mothballing செய்யப்படுகிறதா என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடங்களில் மேற்பரப்பு மண் மாற்றப்பட்ட அனைத்து பகுதியிலும் மண்ணின் தன்மை குறித்து ஆய்வுகள் செய்ய வேண்டும் என்றும் நேரடியாக கள ஆய்வு செய்வதற்காக மேலும் 6 வாரங்கள் கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்று நிபுணர் குழு தீர்ப்பாயத்திடம் கோரியது. இதனை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம்  நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 2 மாதங்கள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading