• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உளவுத்துறையில் அனுபவம், ஊழலுக்கு எதிராக அதிரடி: தமிழகத்தின் புதிய ஆளுநர்!

உளவுத்துறையில் அனுபவம், ஊழலுக்கு எதிராக அதிரடி: தமிழகத்தின் புதிய ஆளுநர்!

ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவி

வடகிழக்கு விவகாரங்களில் கைதேர்ந்தவர் என்பதால், 2014 ஆகஸ்ட்டில் நாகர் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்திய அரசின் சார்பாக மத்தியஸ்தராக  ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்

  • Share this:

    • தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.  தற்போது நாகாலாந்து ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவிக்கு  உளவுத்துறை, சிபிஐ போன்றவற்றில் நீண்ட அனுபவம் உள்ளது. பத்திரிக்கையாளர் போன்ற பன்முகத்தன்மையும் வாய்ந்தவராக அவர் உள்ளார்.


    தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப்  மாநிலத்தின் நிரந்தர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் பிறந்த ஆர்.என்.ரவியின் முழுப் பெயர் ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி ஆகும். இயற்பியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள ஆர்.என்.ரவி பத்திரிக்கையாளராகவும் இருந்துள்ளார்.

    1976ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த ஆர்.என்.ரவிவுக்கு கேரளாவில் பணி வழங்கப்பட்டது. அங்கு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்ற  அவர், பின்னர் மத்திய அரசின் பொறுப்புக்கு மாற்றலாகி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.  சிபிஐ அதிகாரியாக பணியாற்றியபோது, சுரங்க மாஃபியாக்கள் உட்பட குற்ற குழுக்களுக்கு எதிராக கடுமையான ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை ரவி மேற்கொண்டுள்ளார்.

    உளவுப் பிரிவில் பணியாற்றியபோது, ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவர் அதிகம் பணியாற்றினார். தெற்காசியாவில் மனிதர்களின் பூர்விக குடியேற்றத்தின் இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்ற  ஆர்.என். ரவி  எல்லையோர மக்களின் அரசியல், சமூகவியலில் ஏற்படும் தாக்கங்களை ஆராய்ந்து  திட்டங்களை வகுக்க காரணமாக இருந்தார். இனக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் ஆயுத குழுக்களை அமைதி பாதைக்கு  திரும்ப வைப்பதில் அவர் முக்கிய பங்காற்றினார்.



    2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தேசிய நாளிதழ்களில்  கட்டுரைகளை அவர் எழுதி வந்தார்.பின்னர்,  பிரதமர் அலுவலகத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.நாட்டின் உளவுத்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்புகளை ஒருங்கிணைத்து அவற்றுக்கு வழிகாட்டியாகவும் அவர் செயல்பட்டார்.

    இதையும் படிங்க:  அடுத்த 15 ஆண்டுகளுக்கு பிரிக்ஸ் ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டும்- பிரதமர் மோடி


    வடகிழக்கு விவகாரங்களில் கைதேர்ந்தவர் என்பதால், 2014 ஆகஸ்ட்டில் நாகர் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்திய அரசின் சார்பாக மத்தியஸ்தராக  ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி  நாகாலாந்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். அதன்பின்னர், தற்போது தமிழகத்தின் ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: