உண்மை விசுவாசிகளை நீக்கிக்கொண்டே போனால் கட்சி என்னவாகும்? அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ கேள்வி

அஇஅதிமுக அலுவலகம்

அ.தி.மு.கவின் உண்மை விசுவாசிகளை நீக்கிக்கொண்டே போனால் கட்சியின் நிலை என்னவாகும் என்று கடலூர் எம்.எல்.ஏ சத்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
    அ.தி.மு.கவின் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ சத்ய பன்னீர் செல்வம் உள்ளிட்ட 6 நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி நேற்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். இந்தநிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக எம்.எல்.ஏ சத்ய பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ‘சட்டமன்றத் தேர்தலுக்கான கழக வேட்பாளர் அறிவிப்பிற்கு பிறகு நாங்கள் அரசியல்
    மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகி அறிக்கை வெளியிட்டு விட்டோம். அதன்பிறகு, வேட்பாளர் அறிவிப்பில் இருந்து தேர்தல் முடியும் வரை பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியிலேயே இல்லை. ஒவ்வொரு கோயிலாக சென்று இறைவனை தரிசிக்க இறை சுற்றுலா மேற்கொண்டிருந்தோம். நாங்கள் ஊரிலே இல்லாத நிலையில் கழகத்திற்க்கு எதிராகவோ, எதிர்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவோ எப்படி தேர்தல் பணியாற்ற இயலும்.

    நாங்கள் எந்த ஒரு செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை என்பதை பண்ருட்டி தொகுதி முழுக்க உள்ள அஇஅதிமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பண்ருட்டி தொகுதி மக்கள் உள்பட அனைவருக்குமே தெரியும். இதற்கு நான் வணங்கும் ஈசனும், அம்மாவின் ஆன்மாவும் சாட்சி. இந்நிலையில் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகிய எங்களை கழக வேட்பாளரை எதிர்த்தும், எதிர்கட்சியினருக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக அபாண்டமான பொய்யான குற்றசாட்டை எங்கள் மீது சுமத்தியதுடன் எங்களுடன் நகர ஒன்றியச் செயலாளர்கள் உள்பட நால்வரை கழகத்திலிருந்து நீக்குவதாக தலைமை கழகம் அறிவித்து இருப்பது மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது. கடலூர் சம்பத், சொல்படி வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் உளவுதுறையை தன் கையில் வைத்திருக்கும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி காவல்துறை அறிக்கையை கேட்டு பெற்றுஇருந்தாலே உண்மை தெரியும் அல்லது அண்ணன் எடப்பாடி பழனிசாமி எங்களையோ பண்ருட்டி தொகுதி கழகத்தினரையோ அழைத்து பேசியிருந்தாலோ உண்மை தெரிந்திருக்கும். கண்டிப்பாக இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிட வாய்ப்பு ஏற்பட்டு இருக்காது. இந்த அறிவிப்பால் எங்கள் மீது பொய்யான பழி சுமத்தப்பட்டதோடு எங்களை போன்ற அம்மாவின் உண்மையான விசுவாசிகளின் மனதை புண்படுத்தியுள்ளார்கள்.

    இதற்கு காலம்தான் பதில் சொல்லும். அம்மா இருந்திருந்தால் எங்களை போன்ற கழக விசுவாசிகளுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது. இந்த அறிவிப்பை கழக தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உண்மையாகவே கழக விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் அரசியல் சூன்யகாரர்களான கடலூர் சம்பத், வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர்களை நான் வணங்கும் ஈசனும் அம்மாவின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது.

    கழகத்திற்க்கு விசுவாசமான உண்மையான கழக தொண்டர்கள் வயிறு எரிந்தால் இந்த படுபாதகர்கள் விரைவில் நாசமாகபோவார்கள். தமிழகம் முழுவதும் ஒரு தவறும் செய்யாத எங்களை போன்ற உண்மையான அம்மா விசுவாசிகளை கழகம் இழந்து கொண்டே போனால் கழகத்தின் நிலை என்ன? பொறுத்திருப்போம். காலம் பதில் சொல்லும். இந்த செயல்பாடு விதி என்றிருப்போம். நல்லோர்க்கு நல்லதே நடக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: