கட்சியிலிருந்து விலக்கியதற்கு விளக்கம் கேட்டு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்க்கு நோட்டிஸ் - முன்னாள் அ.தி.மு.க நிர்வாகி அதிரடி

அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி சுரேஷ்

எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சுரேஷ் என்பவரை நீக்கியதாக கொடுக்கப்பட்ட அறிவிப்பை 15 நாட்களுக்குள் திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சுரேஷ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
அ.தி.மு.க தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோ வெளியாவதும், அவ்வாறு பேசியவர்களை அ.தி.மு.கவிலிருந்து நீக்குவதும் சமீபத்தில் அதிகமாக நடந்துவருகிறது. அவ்வாறு நீக்கப்பட்ட சேலம் மாவட்டம் எடப்பாடி சுரேஷ் என்பவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேலம் மாவட்ட மீனவர் அணி செயலாளராக இருந்தவர் எடப்பாடி சுரேஷ். இவர் 1991-ம் ஆண்டு முதல் அ.தி.மு.கவில் அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சசிகலா  எடப்பாடி சுரேஷ் அவர்களுடன் தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகியது.

இதனையடுத்து கடந்த 05-07-2021 அன்று  எடப்பாடி சுரேஷ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் கட்சியில் இருந்து தொண்டர்களை நீக்குவதற்கு கழக விதிகளில் 35-வது விதி உட்பிரிவு 12 படி பொதுச் செயலாளருக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது. எனவே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதற்கு விளக்கம் கேட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு, தனது வழக்கறிஞர் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

15 நாட்களுக்குள் எடப்பாடி சுரேஷை நீக்கியதாக கொடுக்கப்பட்ட அறிவிப்பை திரும்ப பெறுவதாக மறு அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையெனில்  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி சுரேஷ், ’அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமான பிறகு அ.தி.மு.கவின் பொதுசெயலாளராக V.K. சசிகலாவை கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர்.

கடந்த 12-09-2017 அன்று ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவராலும் ஏற்பாடு செய்யப்பட்டு சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழவில் கழக பொதுசெயலாளர் சசிகலாவை பற்றி தவறான செய்திகளை பரப்பி உண்மைக்கு புறம்பானவைகளை கூறி கட்சி தொண்டர்களை நம்பவைத்து அ.தி.மு.க பொது செயலாளாராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என ஒரு தீர்மானம் போட்டனர்.

கழக ஒருங்கிணைப்பாளர் , கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்று அ.தி.மு.க விதிகளில் இல்லாத இரு பதவிகளை இருவரும் உருவாக்கிக்கொண்டு பதவி வகித்து வருகிறார்கள். இதை எதிர்த்து சசிகலா, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு தற்போதுவரை நிலுவையில் உள்ளது.

அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தை தோற்றுவித்த எம்.ஜி.ஆர் இயக்கத்தை ஆரம்பிக்கும் போதே கழக விதிகளை வகுத்துள்ளார் . கழக விதி 43 - ன்படி பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என அந்த விதியில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஊஊ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அ.இ.தி.மு.கழக விதிகளின் படி ஒ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் வகிக்கும் பதவிகள் ஏதும் இல்லை. கழக விதிகளுக்கு எதிரான புதிய விதிகளை தாங்களே ஏற்படுத்திக்கொண்டு சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறார்கள். கழக விதிகளின் படி பொது செயலாளர் மட்டுமே ஒருவரை கட்சியிலிருந்து நீக்கமுடியும். எனவே ஒருவரை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு தான் உள்ளது. இவர்கள்  இருவருக்கும் அந்த  அதிகாரம் இல்லை’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published: