• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பா.ம.க தமிழகத்தை ஆளும் நிலைக்கு கொண்டுவர கடுமையாக உழைக்க வேண்டும் - பா.ம.க பொதுக்குழுகூட்டத்தில் தீர்மானம்

பா.ம.க தமிழகத்தை ஆளும் நிலைக்கு கொண்டுவர கடுமையாக உழைக்க வேண்டும் - பா.ம.க பொதுக்குழுகூட்டத்தில் தீர்மானம்

ராமதாஸ்

ராமதாஸ்

தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடன், கட்சியின் நிர்வாக அமைப்பில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய பொதுக்குழு தீர்மானித்திருக்கிறது.

  • Share this:
    தமிழகத்தை ஆட்சி செய்யும் நிலைக்கு பாமகவை முன்னேற்ற கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் சிறப்புபொதுக்குழு கூட்டத்தில் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம், ஆன்-லைன் மூலமாக நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஜி.கே.மணி தலைமை தாங்கினார். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகம்-புதுச்சேரியை சேர்ந்த மாநில-மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம்: தமிழ்நாடு மிகவும் நெருக்கடியான காலகட்டத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. வளர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு, பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டிப் போட்டுக் கொண்டு முன்னேறுவதற்கான திறனும், வளங்களும் தமிழ்நாட்டிற்கு உண்டு. ஆனாலும், தமிழ்நாடு அதன் திறனுக்கேற்ற முன்னேற்றத்தை இன்னும் எட்டிப்பிடிக்கவில்லை. வளர்ச்சிக்கான போட்டியில் தமிழ்நாடு போட்டியிட வேண்டியது உத்தரப்பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களுடன் அல்ல. மாறாக, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் தான். தமிழகம் அதிக வளர்ச்சியடையவில்லை என்பதை நியாயப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டை அனைத்து நிலைகளிலும் அதைவிட குறைந்த மாநிலங்களுடன் ஒப்பிட்டு மனநிறைவு அடைந்து கொள்வது போலியான மகிழ்ச்சி ஆகும். இது தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் அளிக்காது.

    Also Read:  என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி உட்கார வேண்டும் - பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ்

    தமிழ்நாடு உலக நாடுகளுடன் போட்டிப்போட்டு வளர்ச்சியடைவதற்கான தடைகளை அகற்றி, அதிவேக வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான செயல்திட்டங்களும், அரசியல் துணிச்சலும் பாட்டாளி மக்கள் கட்சியிடம் உள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 19 ஆண்டுகளாக தயாரித்து, மக்கள் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிழல் நிதி அறிக்கையில் இடம் பெற்றுள்ள திட்டங்களில் 50 விழுக்காட்டை செயல்படுத்தியிருந்தால் கூட தமிழ்நாடு அதிவேக வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடை போட்டிருக்கும். நிழல் நிதிநிலை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக இன்னும் ஏராளமான யோசனைகளையும், செயல்திட்டங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி தயாரித்து வைத்துள்ளது. அவை செயல்படுத்தப்பட்டால் சிங்கப்பூர், ஜப்பான், கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் போட்டிப் போட்டு தமிழ்நாடு வளர்வதை உறுதி செய்ய முடியும்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமானால்  தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் நிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சி முன்னேற வேண்டும். பா.ம.கவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று முழக்கமிடுவதால் மட்டும் அது சாத்தியமாகிவிடாது. அதற்கான செயல் திட்டங்களை வகுத்து கடுமையாக உழைத்தால் மட்டும் தான் ஆட்சிக் கனவு நனவாகும்.வலிமையான கட்சிகள் தான் வலிமையான ஜனநாயகத்திற்கு அடித்தளம் அமைக்கும்.

    தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடன், கட்சியின் நிர்வாக அமைப்பில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய பொதுக்குழு தீர்மானித்திருக்கிறது. அதனடிப்படையில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகிய பதவிக்கான அதிகாரங்களில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. கட்சியின் விதி எண் 10-இல் திருத்தம் செய்யப்பட்டு, மாவட்ட அளவில் மாநில துணைப் பொதுச்செயலாளர் பதவி கைவிடப்படுகிறது. இனி கட்சி ரீதியிலான மாவட்ட அமைப்பு மாவட்ட செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும். இந்த ஒரு மாற்றத்தைத் தவிர மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்பு முன்பிருந்த நிலையிலேயே தொடரும். இந்த மாற்றத்தின்படி மாவட்ட செயலாளர்கள் பட்டியலை கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும். அதுவரை மாவட்ட அளவில் கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க இப்போதுள்ள நிர்வாகிகளை தற்காலிகமாக அதே பதவிகளில்  தொடரச் செய்வது என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இந்தச் சிறப்பு பொதுக்குழு தீர்மானிக்கிறது.’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: