விரைவில் பல முடிவுகளை அறிவிப்பேன்... அரசியல் எதிர்பார்ப்பு குறித்து சகாயம் ஐ.ஏ.எஸ் விளக்கம்

விரைவில் பல முடிவுகளை அறிவிப்பேன்... அரசியல் எதிர்பார்ப்பு குறித்து சகாயம் ஐ.ஏ.எஸ் விளக்கம்

சகாயம் ஐஏஎஸ்

என் நேர்மையான பயணம் ஏதோ மெகா திட்டத்தோடு ஒரு அரசியலுக்கான அடித்தளமாக ஒரு நாளும் நான் கருதவில்லை

  • Share this:
நண்பர் மற்றும் எனது நலவிரும்பிகள் உடன் கலந்து ஆலோசித்து விட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் விரைவில் பலமுடிவுகளை அறிவிப்பேன் என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பிரத்யேக பேட்டியளித்தார். அதில், “சமூக நன்மைக்காக இன்னும் தீவிரமாக செயல்பட காத்திருக்கிறோம் என்று தான் நான் தற்போதைக்கு சொல்ல விரும்புகிறேன். என்னுடைய 30 ஆண்டுகால பணியில் எந்த லட்சியத்துடன் சேர்ந்தேனோ, எந்த நேர்மையின் உச்சத்தோடு சேர்ந்தேனோ அதே நேர்மை எள் முனை அளவு குறையாமல் இன்றைக்கும் இருக்கிறது. அதோடு தான் நான் என் பணி ஓய்வை வழங்கிவிட்டு வந்திருக்கிறேன்.

வரக்கூடிய இளைய சமுதாயம் எப்படி முதல் நாள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று ஒரு பணி செய்கிறார்களோ, அதே போல் கடைசி நாள் வரை இருக்க வேண்டும். அந்த உண்மையான நேர்மையைக் கடைப்பிடிக்க கூடியவர்களாக இளைஞர்கள் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்

நான் அரசு பணியில் நேர்மையாக இருந்தது, அரசியல் திட்டத்தோடு அல்ல.  நேர்மையாக இருக்க வேண்டும் என்பது தான் விதி. அந்த விதிக்கு ஏற்ப நான் செயல்பட்டேன். ஊழல் நிறைந்த நம்முடைய நிர்வாகத்தில் என்னைப்போன்ற அலுவலர்கள் இந்த சமூகத்தை முழுமையாக நேசிக்கக் கூடிய அலுவலர்கள் நேர்மையாக இருந்தால் தான் இந்த சமூகத்தை நேசிப்பது உண்மையாக இருக்க முடியும்.  எனவே அந்த அடிப்படையில் பல அவமானங்களையும் இடையூறுகளையும் தாங்கிக்கொண்டு நான் இன்றைக்கும் எப்படி முதல் நாளில் அந்த நேர்மையை கையில் கொண்டிருந்தேனோ தற்பொழுதும் அதையே நேர்மையுடன் பயணிக்கிறேன்.என் நேர்மையான பயணம் ஏதோ மெகா திட்டத்தோடு ஒரு அரசியலுக்கான அடித்தளமாக ஒரு நாளும் நான் கருதவில்லை. ஒரு ஐஏஎஸ் அதிகாரியிடம் ஏன் ஒரு அரசியல்வாதிகான தேடல் இன்றைய இளைய தலைமுறை தேடுகிறார் என்பதைதான் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது . எனவே நேர்மையான அரசியல் தளம் இன்றைய காலகட்டத்திற்கு தேவைப்படுகிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.  நிச்சயமாக என்னுடைய நேர்மையை இந்த சமூகத்திற்காக காண்பிப்பேன்.

அதுகுறித்து என் நண்பர்கள் நலம் விரும்பிகள் உடன் பேசி முடிவெடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது  அப்பொழுது அது பற்றி தெரிய வரும் . அதுவரை இது போன்ற வதந்திகளை சிலர் நல்நோக்கத்துடனும் ஒரு சிலர் உள்நோக்கத்துடனும் பரப்புவார்கள். ஒரு சிலர் வஞ்சக எண்ணத்தோடு அந்த எண்ணங்களை பரப்புகிறார்கள் அப்படிப்பட்ட வதந்திகளை நம்ப வேண்டாம். சமூக நன்மைக்காக இன்னும் தீவிரமாக செயல்பட காத்திருக்கிறோம் என்று தான் நான் தற்போதைக்கு சொல்ல விரும்புகிறேன்“ என்றார்.
Published by:Vijay R
First published: