சசிகலாவின் வருகை மட்டுமே
அதிமுகவை காப்பாற்றும் என்று அக்கட்சியில் இருந்து இன்று வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை சேர்க்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அதிமுக மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சசிகலாவை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, கட்சியில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு ஓ.ராஜா அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது-
ஓ.பி.எஸ். கையெழுத்துப் போட்டால் நான் கட்சியை விட்டு போய்விட முடியுமா? ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை வளர்க்க ஏதாவது செய்துள்ளார்களா?
இதையும் படிங்க -
சசிகலாவுடன் சந்திப்பு... தம்பி ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்கினார் ஓ.பன்னீர் செல்வம்
இவர்கள் பொறுப்புக்கு வந்து 4 தேர்தல்களை சந்தித்துள்ளோம். அதன்பின்னர் அதிமுக தரைமட்டத்திற்கு வந்து விட்டது. இவர்கள் இருவரும் தொண்டர்களை நினைத்துப் பார்ப்பதில்லை. தொண்டர்கள் அனைவரும் கஷ்டமும், சிரமமும் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சசிகலாவின் வருகை மட்டுமே அதிமுகவை காப்பாற்றும். அவர்கள் மட்டும்தான் ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் உடன் இருந்தார்கள். ஓ. பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியுமா உடன் இருந்தார்கள்? இவர்களுக்கு கட்சியில் பதவி கொடுத்தது யார்? சசிகலாதானே தேர்தலில் நிற்க சீட்டும், பதவியும் கொடுத்தார்கள்.
இதையும் படிங்க -
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள்
எம்ஜியாரும், ஜெயலலிதாவும் உருவாக்கி வளர்த்த அதிமுகவை ஓ பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எளிதாக அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் அதிமுக தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதற்கு இந்த இருவரும்தான் காரணம். கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்படுவார்கள் என்று தீர்மானம் போட்டு விட்டு ஏன் பின் வாங்குகிறார்கள்?
இவ்வாறு அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.