Exclusive | "பழங்குடியின மக்களுக்கு 100% தடுப்பூசி - சாத்தியமானது எப்படி? இன்னசென்ட் திவ்யா நியூஸ் 18க்கு பிரத்யோக பேட்டி

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

தகுதி வாய்ந்த பழங்குடிகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டம் என்ற பெருமையை நீலகிரி மாவட்டம் பெற்றுள்ளது.

  • Share this:
நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை இயக்குநர் பாலசாமி ஆகியோருக்கு சென்னையில் நடந்த மருத்துவர் தின நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டினார். உதகையில் பழங்குடியின மக்கள் 21800 பேருக்கும் 100 சதவீத தடுப்பூசி செலுத்தியதற்காக நீலகிரி ஆட்சியருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யோக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நாட்டில் பழங்குடியின மக்களுக்கு 100 சதவிகித தடுப்பூசி செலுத்திய மாவட்டம் நீலகிரி என்ற சாதனை படைத்திருக்கிறது. இது எவ்வாறு சாத்தியமானது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், “ கூட்டு முயற்சியாக இதை செய்திருக்கிறோம். மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார பணியாளர்கள், மருத்துவ துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், அரசு சாரா அமைப்பினர், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். எனவே, இது சாத்தியமாகி இருக்கிறது.

முதலமைச்சரிடம் பாராட்டு சான்றிதழ் கவுரவம் கிடைத்தது மகிழ்ச்சி. இரண்டாவது அலையில் நீலகிரியில் பழங்குடியின மக்கள் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். பழங்குடி மக்களிடம் தடுப்பூசி செலுத்தினால், இறந்துவிடுவோம், குழந்தை பிறக்காது போன்ற தயக்கம் இருந்தது. ஆனால் அவர்களுக்கு பிடித்த நடிகர்கள், பாடல் போன்றவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். பழங்குடியின மக்களை காப்பாற்றும் முயற்சியாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க... Doctors | "மருத்துவர்கள் நலன் காக்கும் அரசு" தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அதன் பின்னர் பழங்குடியின மக்களிடம் எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், “முதலில் செயல் திட்டத்தை வகுத்தோம். ஒவ்வொரு நாளும் கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தினோம். ஜூன் மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்தோம். ஒவ்வொரு பகுதிக்கும், முதல் நாள் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். ஒவ்வொரு பகுதியிலும் அந்த மக்கள் யாரை நம்புகிறார்களோ அவர்களை வைத்து பேச வைத்து, நம்பிக்கை வர வைப்போம். பின்னர், அடுத்த நாள் சென்று தடுப்பூசி செலுத்துவோம். ஒவ்வொரு கிராமங்களுக்கும், மலைப்பகுதிகளுக்கு மருத்துவர்கள் இரு சக்கர வாகனத்திலும், நடந்தும் சென்று மிகுந்த சிரத்தையெடுத்து இதை ஒரு சவாலாக முன்னெடுத்து செய்தனர்” என்றார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா


அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட அதிக தடுப்பூசி செலுத்திய மாவட்டமாகவும் நீலகிரி திகழ்கிறது. இதுபற்றி? என்று கேள்வி கேட்டதற்கு ,” நீலகிரி மாவட்டத்தில் பொது மக்களுக்கும் நன்றாக விழிப்புணர்வு இருக்கிறது. அரசு சொல்வதை செய்தார்கள். எனவே எளிமையாக, விரைவாகவும் செய்ய முடிந்தது. விரைவில் முழுமையாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட மாவட்டமாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறோம். தற்போது 50 சதவீத மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது” என்று பதில் கூறினார்.

மேலும் சுற்றுலா மாவட்டமான நீலகிரியில், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்ற கேள்விக்கு,” நீலகிரியில் மாவட்ட எல்லை கண்காணிக்கப்படுகிறது. இது சுற்றுலா மாவட்டம். எனவே முழுமையாக தடுப்பூசி செலுத்திய பின், சுற்றுலா பயணிகளை உள்ளே அனுமதிக்கலாம். தடுப்பூசி போதிய கையிருப்பு கிடைத்ததும், முழுமையாக அனைத்து மக்களுக்கும் நீலகிரியில் செலுத்தப்படும்” என்று பதிலளித்தார்.
Published by:Vaijayanthi S
First published: