முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ‘எங்கே போனார் வேலுமணி’: எட்டு மணிநேரம் காணாமல் தவித்த காவல்துறையினர்!

‘எங்கே போனார் வேலுமணி’: எட்டு மணிநேரம் காணாமல் தவித்த காவல்துறையினர்!

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

காலை 7.30 மணிக்கு விமான நிலையத்திலிருந்து சென்ற நிலையில் 3.30 வரை சுமார் 8 மணி நேரம் வேலுமணி எங்கு சென்றார் என தெரியாமல் போலீசார் தவிப்பிலேயே இருந்து வந்துள்ளனர்

  • Last Updated :

தூத்துக்குடிக்கு விமானம் மூலம் இன்று காலை வந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி அதன்பின்னர் எங்கு சென்றார் என்பது தெரியாமல் காவல்துறை உயரதிகாரிகள் தவித்தனர்.

தமிழகத்தில் ஜெயலலிதா அமைச்சரவையிலும் அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையிலும் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் எஸ் பி வேலுமணி. கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தற்போது இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆட்சியின் போது 800 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி வேலுமணியின் வீடுகள் மற்றும் அவருக்கு தொடர்புடைய 60க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை முதல் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னை சட்டப்பேரவை உறுப்பினர் குடியிருப்பில் தங்கியிருந்த வேலுமணியிடமும் நேற்று காலை முதல் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் திராவிட முன்னேற்ற கழகம் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருந்தார். வேலுமணி வீடுகளின் முன்பு அதிமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் 2-வது நாளாக அவருக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் சூழலில் சென்னையில் இருந்து இன்று காலை தனது மகன் விவேக்குடன் விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வேலுமணி வந்தடைந்தார்.  7:30 மணிக்கு விமான நிலையத்திலிருந்து வெளியேறிய அவர் சொகுசு கார் மூலம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.  தூத்துக்குடி திருநெல்வேலி சாலையில் உள்ள சுங்க சாவடியில்  ஏழு மணி 33 நிமிடங்களுக்கு அவர் சென்ற வாகனம் கடந்து சென்றுள்ளது. அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை.

மேலும் படிக்க: தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு: சிறந்த நகராட்சி உதகை!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு அவர் சென்றிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிகமாக கூடுவார்கள் என்ற நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய இன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் அவர் அங்கு சென்று சுவாமி தரிசனம் செய்து இருக்க வாய்ப்பில்லை.  சுமார்  8 மணிநேரத்திற்கு மேலாக  வேலுமணி எங்கு சென்றார் என்பது குறித்த தகவல் தெரியாமல் உளவுப்பிரிவு போலீசார் திகைத்தனர் .உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க முடியாத நிலையில் தொடர்ந்து தகவல்களை பெற முயற்சித்த நிலையில் அதில் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது.

நான்கு மணி விமானத்தில் மீண்டும் சென்னை செல்வதற்காக 3.30 மணிக்கு தான் சென்ற அதே காரில் வேலுமணி விமான நிலையம் திரும்பினார். அங்கு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த வேலுமணி, ‘ லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். கட்சியின்  தலைவர்களான ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இருவரின் அனுமதியைப் பெற்று விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன்’ என தெரிவித்தார்.

மேலும் படிக்க: தமிழகத்தைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கு கோல்டன் விசா வழங்கிய அரபு அமீரகம்

தமிழக அரசின் வெள்ளை அறிக்கைக்கும் உங்களது வீட்டில் நடைபெற்ற சோதனைக்கும் தொடர்பு இருக்கிறதா உங்களது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த காரணம் என்ன என்பது குறித்த பல்வேறு கேள்விகளுக்கும் எவ்வித பதிலையும் அளிக்காத வேலுமணி விரைவில் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறி விமான நிலையத்துக்குள் சென்றார்.

காலை 7.30 மணிக்கு விமான நிலையத்திலிருந்து சென்ற நிலையில் 3.30 வரை சுமார் 8 மணி நேரம் அவர் எங்கு சென்றார் என தெரியாமல் போலீசார் தவிப்பிலேயே இருந்து வந்துள்ளனர்.  இதனிடையே தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் உள்ள மடத்திற்கு சென்று  சிறப்பு யாகம் வளர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. வேலுமணி மீண்டும் விமான நிலையம் வந்த பின்னரே உளவுத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.

First published:

Tags: SP Velumani