முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரெய்டில் சிக்க என்ன காரணம்?

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தமிழகலஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைக்கு ஆளாகியிருக்க கூடிய நிலையில் இந்த அதிரடி ரெய்டுக்கு காரணம் என்ன ? என்பதை விரிவாக பார்க்கலாம்.

 • Share this:
  கடந்த அதிமுக ஆட்சியில் முக்கியத் துறைகளில் ஒன்றான போக்குவரத்துறையின் அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். கரூரில் இவருக்கு சொந்தமான வீடு மற்றும் ரெயின்போ என்ற பெயரில் அவர் நடத்தும் நிறுவனங்களான கல்குவாரிகள், சாயப்பட்டறை நிறுவனம் மற்றும் அட்டைப் பெட்டி தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

  எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் நடத்தும் நிறுவனங்கள் மற்றும் அவரது மனைவி சாந்தி பெயரில் உள்ள நிறுவனங்களிலும் அதிகாலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அமைச்சராக இருந்த போது எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அரசு உதவியாளராக இருந்த கார்த்திக் மற்றும் தனி உதவியாளராக இருந்த ரமேஷ் ஆகியோர் வீட்டிலும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

  எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருக்கும் கட்சி பிரமுகர்களான ஏகாம்பரம், பரமசிவம் மற்றும் நில விற்பனையில் ஈடுபட்டுவரும், முன்னாள் அமைச்சரின் உறவினரான சேகர் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. மொத்தம் 26 இடங்களில், 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

  சென்னையில் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொந்த வீடு கூட இல்லை, 'வாடகைவீட்டில் தான் வசிக்கின்றார்' என்று அவர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டாலும் கரூரில் அவரது சொந்தமான வீட்டில் காயவைக்கப்பட்டிருந்த கொப்பரை தேங்காய் மத்தியில் இருந்து பல கோப்புகளை கைபற்றியுள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் .

  அளவிற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரையடுத்து தான் இந்த அதிரடி சோதனை என்று சொல்லப்பட்டாலும் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை ஏற்கனவே பெற்றப்பிறகு தான் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  ஸ்டிக்கர் .. ஜி.பி.எஸ் கருவி ..வேககட்டுப்பாட்டு கருவி ஆயிரம் ரூபாய் பெருமானம் கொண்ட இவை தான் பல ஆயிரம் கோடி ஊழலுக்கு காரணமாக அமைத்துள்ளதாக கூறப்படுகின்றது

  நடந்துமுடிந்த சோதனையில் கடந்த ஆட்சியில் போக்குவரத்துறையில் அரசு ஒப்பந்ததார்களாக இருந்த இரண்டு பேர் வீடுகளில் சோதனை நடந்துள்ளது. இவர்கள் வீட்டில் நடந்த சோதனைக்கு வாகனங்களுக்கு பின்னால் ஒட்டப்படும் பிரதிபளிப்பு ஸ்டீக்கர் ஒப்பந்தம் செய்ததில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதை லஞ்ச ஒழிப்புத்துறை மோப்பம் பிடித்துள்ளது தான் காரணம் என்கின்றனர் அதிகாரிகள்.  மோட்டார் வாகன சட்டத்தின் படி விபத்தை தவிர்க்க வாகனங்களுக்கு பின்பக்கம் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும். அப்படிப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே ஆர்.டி.ஒ அனுமதி கொடுப்பார். இந்த ஸ்டிக்கர்களை விற்பனை செய்ய மத்திய அரசு இந்தியாவில் 11 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே ஸ்டிக்கர் விற்பனை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

  இந்த இரண்டு நிறுவனங்களும் நேரடியாக தமிழகத்தில் ஸ்டிக்கர் விற்பனை செய்யமுடியாது. டெடி என்ற நிறுவனத்தினத்தின் இணையதளம் மூலமாக பதிவு செய்த பிறகு தான் தமிழகத்தில் உள்ள நான்கரை கோடி வாகனங்களுக்கும் ஸ்டிக்கர் வாங்க முடியும் என்ற நடைமுறையை அப்போதைய அரசு கொண்டுவந்துள்ளது.

  டெடி என்ற நிறுவனத்திற்கு இந்த ஸ்டிக்கர் விற்பனை அனுமதி எந்த ஒப்பந்தமும் கோரப்படாமல் அமைச்சர், ஆணையர் ஒப்புதலின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. சாரணமாக கடைகளில் வாங்கப்படும் ஸ்டிக்கர்களை டெடி தனியார் வெப்சைட்டில் பதிவு செய்த பிறகு தான் வாங்க வேண்டும் என்பதே ஊழலுக்கான முதல் நடவடிக்கை என்று குற்றம் சாட்டுகின்றார்,

  இந்த டெடி நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டதில் இருந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிரதிபளிப்பு ஸ்டிக்கர்கள் 3000 ரூபாய் வரை விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக ஒப்பந்தத்தை பெற்ற டெடி நிறுவனம் தனக்கு கீழே பல தனியார் நிறுவனங்களிடம் பல லட்சங்களை வாங்கிக்கொண்டு இந்த ஸ்டிக்கர்களை விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

  மேலும் வாங்கப்படும் ஸ்டிக்கர்களுக்கு பில் கொடுக்காமல் ஜி.எஸ்.டி முறைகேடும் நடந்துள்ளதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாகனங்களுக்கு இப்படி விலை உயர்த்தி பிரதிபளிப்பு ஸ்டிக்கர்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தெரிகின்றது.

  டெடி என்ற நிறுவனத்திற்கு ஸ்டிக்கர் விற்பனை செய்யப்பட அனுமதி கொடுக்கப்பட்டது போன்றே வாகனங்களுக்கு பொருத்தப்படும் வேகக்கட்டுப்பாட்டு கருவி ,மற்றும் ஜி.பி.எஸ் கருவிகளை விற்பனை செய்ய பாந்தன் என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

  இந்ந பாந்தன் நிறுவனத்தின் பின்னணி தான் மேலும் இந்த முறைகேட்டில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு தானிய கொள்முதலில் பல ஆயிரம் கோடி மோசடிகளை செய்த கிருஷ்டி நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் இந்த பாந்தன். இந்த நிறுவனம் தான் தற்போது தமிழகத்தில் உள்ள நான்கரை கோடி வாகன ஆவணங்களை ஸ்மார்ட் கார்டாக மாற்றும் ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது

  இது போன்று வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவியை பொருத்த அனுமதிப்பது, வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்துவது வாகன ஆவணங்களை ஸ்மார்ட் கார்டாக மாற்றும் ஒப்பந்தம் என்று போக்குவரத்து துறையில் பல ஒப்பந்தங்களிலும் மோசடி நடந்திருப்பதாக லாரி உரிமையாளர் சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது

  பிரதிபளிப்பு ஸ்டிக்கர்கள் வாங்குவது ,ஜி.பி.எஸ் கருவி வாங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை இருந்தும் இன்னும் வாய் மொழி உத்தரவு மூலம் முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் இந்த ஆட்சியிலும் லாபம் பார்த்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன.

  இந்த நிலையில் தான் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி சோதனை ஒருபுறம் இருக்க எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களின் பட்டியல் ஒன்று கசிந்துள்ளது

  1. ரெயின்போ பேக்கேஜிங்

  2. ரெயின்போ டயர்ஸ்

  3. ரெயின்போ கலர்ஸ்

  4. ரெயின்போ ஹோம் பேப் பிரைவேட் லிமிடெட்

  5. ரெயின்போ புளுமெட்டல்

  6. விஸ்வா எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமானவை என்கின்றன விவரம் தெரிந்த வட்டாரங்கள்

  அதேபோல்

  1. விஜய் பேக்கர்ஸ்

  2. ரெயின்போ டயர்ஸ்

  3. ஆரியர் ஸ்ரீ செல்லாண்டியம்மன் டிரான்ஸ்போர்ட்ஸ்

  4. ரெயின்போ விண்டெக் பிரைவேட் லிமிடெட்

  ஆகிய நிறுவனங்கள் விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமி விஜயபாஸ்கருக்கு சொந்தமானவை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனங்கள், அட்டைப் பெட்டி தயாரிப்பு, சாயப்பட்டறை, டெக்ஸ்டைல்ஸ், கிரஷர், டிரான்ஸ்போர்ட், காற்றாலை உள்ளிட்ட துறை சார்ந்த தொழில்களை செய்து வருகின்றன

  இந்த நிறுவனங்களில் சிலவற்றில் மட்டுமே லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்ததாகவும் அவை மட்டுமே விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இந்த நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான அனைத்து நிறுவனங்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுமா? அல்லது இந்த சோதனை வெறும் கண்துடைப்பாக முடிந்து விடுமா என்பது போகப் போகத் தான் தெரியும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: