நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று
திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணத்துடன் கைகளை கட்டி அடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், ஆயுதங்களைப் பயன்படுத்துதல், உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த 21 ம் தேதி இரவு பட்டினம்பாக்கயிலுள்ள அவரது வீட்டில் காவல் கிழக்கு இணை ஆணையர் பிரபாகர் மற்றும் மாதாவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சென்று ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தண்டையார்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவானது ஜார்ஜ் டவுன் 15-வது நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதனையடுத்து திமுக பிரமுகர் நரேஷ் மீது தாக்குதல் நடத்திய வழக்கு விசாரணையில், ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை போலீசார் வேண்டுமென்றே கொலை முயற்சி(307) வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மேலும் சிறையில் முதல் வகுப்பில் அடைக்காமல், சாதாரண வகுப்பில் அடைந்துள்ளதாகவும் ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் செல்வம் வாதிட்டார்.
தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர், திமுக பிரமுகர் நரேஷ் தாக்கப்பட்ட வழக்கில் மாஜிஸ்திரேட்டிடம் வீடியோவை சமர்ப்பித்து, "சாவடிங்கடா எனவும் “ சட்டையை கழட்டி கையை கட்டுங்கள் எனவும்" ஜெயக்குமார் தனது தொண்டர்களிடம் கூறியதாகவும் அதன் பேரிலேயே கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வாதிட்டார்.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.