முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் 25 கோடி ரூபாய் அளவுக்கு வருவாயை மறைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு போட்டியிடுகிறார். இந்நிலையில், எ.வ.வேலுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 18 இடங்களில் வருமானவரித் துறையினர் கடந்த வாரத்தில் சோதனை நடத்தினர்.
இதில், 25 கோடி ரூபாய் அளவுக்கு வருவாயை மறைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறக்கட்டளையின் வருவாய், கல்லூரிகளில் கட்டண வசூல் ஆகியவற்றை குறைத்துக் காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், கரூரில் உள்ள எ.வ.வேலுவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்திலிருந்து கணக்கில் வராத 3 கோடியே 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.