ஜெ. இறக்கும் முன்பே பதவியேற்க ஏற்பாடு: ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிர்ச்சி வாக்குமூலம்!

news18
Updated: September 12, 2018, 9:46 PM IST
ஜெ. இறக்கும் முன்பே பதவியேற்க ஏற்பாடு: ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிர்ச்சி வாக்குமூலம்!
மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது
news18
Updated: September 12, 2018, 9:46 PM IST
முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் உத்தரவின் பேரில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மாலையே அடுத்த முதல்வர் பதவி ஏற்பதற்கான பணிகளை முடித்துவிட்டோம் என வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016-ம் ஆண்டு செப்டம்பரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழகத்தின் அப்போதைய பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் இருமுறை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. ஆனால், விசாரணை ஆணையத்தில் ஆஜரான மருத்துவர் சிவகுமார் உள்ளிட்டோர் ஜெயலலிதாவை வித்யாசாகர் ராவ் சந்திக்கவில்லை என்று தெரிவித்தனர். எனவே, வித்யாசாகர் ராவ் ஜெயலலிதாவை பார்த்தாரா? இல்லையா? என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக வித்யாசாகர் ராவின் செயலராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவுக்கு, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இதன்படி 2-வது நாளாக விசாரணை ஆணையத்தில் ரமேஷ் சந்த் மீனா ஆஜரானார். அப்போது அவர், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மாலையே வித்யாசாகர் ராவின் உத்தரவின் பேரில் புதிய முதலமைச்சருக்கான பதவியேற்பு ஏற்பாடுகளை முடித்துவிட்டோம் என்று கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2016-ம் ஆண்டு டிச.5-ம் மாலை 6:00 மணிக்கு ஜெயலலிதா இறந்துவிட்டதாக வெளியான செய்தியை மறுத்த அப்போலோ நிர்வாகம் அதே நாள் இரவு 11:30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக செய்திக்குறிப்பு வெளியிட்டது. இந்தச் சூழலில் ஜெயலலிதா உயிரிழந்த நேரம் குறித்து ரமேஷ் சந்த் மீனா கூறியிருக்கும் தகவலில் முரண்பாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா இரவுதான் இறந்தார் என செய்தி வெளியான நிலையில் முன்கூட்டியே பதவியேற்புக்கான ஏற்பாடுகளை செய்தது எப்படி என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே அப்போலோ மருத்துவர்கள் ராஜ் பிரசன்னா, விக்னேஷ் ஆகியோரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்