ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட யூகலிப்டஸ், வேகமாக வளரக்கூடிய மிர்டேஷியே (Myrtaceae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. பெரும்பாலான யூகலிப்டஸ் மரங்கள் ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டவை என்றாலும், நியூகீனி, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் தோன்றியது பல்வேறு வகை யூகலிப்டஸ் மரங்கள். உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ள யூகலிப்டஸ்சில் தற்போது 700க்கும் மேற்பட்ட இனங்கள் உண்டு.
இந்தியாவில் விறகுத் தேவைக்காக ஆங்கிலேயர்களால் 1843ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது யூகலிப்டஸ் எனப்படும் தைலமரம்... நன்றாக மூடிய என்ற அர்த்தம் கொண்ட யூகலிப்டோஸ் (Eucalyptos) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது யூகலிப்டஸ். மலர் மொட்டுகளை கிண்ணம் போன்ற மெல்லிய தோல் மூடியிருப்பதால், இந்த பெயரை பெற்றுள்ளது யூகலிப்டஸ் மரம்...
33 அடியில் இருந்து 200 அடி உயரம் வரை வளரக்கூடிய யூகலிப்டஸ் இனத்தில், அமிக்டாலியா என்ற மரம் மட்டும் 480 அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. நீண்ட மற்றும் கனத்து காணப்படும் யூகலிப்டஸ் இலைகளை பறித்து, சாறு பிழிந்து தயாரிக்கப்படுகிறது யூகலிப்டஸ் எண்ணெய். ஜலதோசம், இருமல், ஆஸ்துமா, மூட்டுவலி உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரக்கூடியது யூகலிப்டஸ் தைலம். வாசனை திரவியம், சாயம், சோப்பு தயாரிப்பு ஆகியவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன யூகலிப்டஸ் மரங்கள்...
சுரங்கத் தொழிற்சாலைகளில் தாதுக்களை பிரித்தெடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது இந்த மரத்தின் எண்ணெய். எரிபொருளாகவும், பேப்பர் தயாரிப்பிலும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன பெரும்பாலான யூகலிப்டஸ் மரங்கள். காட்டுத் தீயில் சிக்கினாலும், தானாக நிலத்தடி நீரை உறிஞ்சி மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை இந்த மரம். இதுதான், இந்த மரத்தை அனைத்துச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்க்கவும், அழிக்கவும் முன்வரும் முக்கிய காரணம்.
Also Read: தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
யூகலிப்டஸ் மரம் ஓரிடத்தில் இருந்தால், அது மற்ற தாவர வகைகளை வளர விடாத அளவுக்கு ஒரு சுயநலவாதி. அதுமட்டுமில்லாமல், அதிக தண்ணீரை உறிஞ்சி, நிலத்தடி நீர் மட்டத்தை கணிசமாக குறைக்கும் குணம் கொண்டது யூகலிப்டஸ். இதன் நீர் உறிஞ்சும் தன்மையைப் பயன்படுத்தி, சதுப்பு நிலங்களை உலர்ந்த இடமாக மாற்றி, பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துகின்றன சில நாடுகள்.
அதையே நமது நாட்டில் சிலர் ஆபத்தான செயல்முறைகளுக்காக யூகலிப்டஸ் மரங்களை வளர்க்க ஊக்குவிக்கப்படுகின்றனர் என்பது அதிர்ச்சியான உண்மை.விவசாயம் செய்ய ஏற்ற பாசன நிலம் அல்லது நீர் தேங்கக் கூடிய பகுதிகளை வீட்டுமனையாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன யூகலிப்டஸ் மரங்கள்.
ஒரு பகுதியை வீட்டுமனையாக மாற்ற நினைக்கும் சிலர், அந்த பகுதி விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தும் திட்டம் யூகலிப்டஸ் மர சாகுபடி. அடுத்த சில ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, விவசாயமே கேள்விக்குறியான பிறகு அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு, வீட்டுமனைகளாக மாற்றப்படுகின்றன விவசாய நிலங்கள்.
விவரம் அறிந்தும், விவரம் தெரியாமலும் வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரங்களால், தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களே அடுத்த சில ஆண்டுகளில் கேள்விக்குறியாகும் நிலை உண்டு. இதன் அடிப்படையிலேயே அன்னிய நாட்டு மரங்களை அழிக்க, குறிப்பாக, யூகலிப்டஸ் மரங்களை அழிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
அத்துடன் புதிதாக யூகலிப்டஸ் மரங்களை நட்டு வளர்க்கவும் உயர்நீதிமன்றம் விதித்துள்ளது தடை. ஏனெனில் மரம் வளர்த்தால், மழை பெறுவோம்; வளம் பெறுவோம் என்பது யூகலிப்டஸ் மரங்களுக்கு பொருந்தாது என்கிறது அறிவியல். யூகலிப்டஸ் மரங்கள் சாதாரணமாக 250 ஆண்டுகள் வாழக்கூடியவை. ஆனால், அவற்றை வளர்த்தால் அடுத்த சில ஆண்டுகளுக்கு கூட நாம் வாழ முடியாது.
செய்தியாளர்: பெரிய பத்மநாபன்உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.