கொரோனா அச்சம் எதிரொலி... ஈரோட்டில் வெறிச்சோடிய ஜவுளி சந்தை...

மாதிரி படம்

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்ததால், ஈரோடு ஜவுளி சந்தை களையிழந்து காணப்பட்டது.

 • Share this:
  ஈரோடு நகரில் செயல்படும் ஜவுளி சந்தை, திங்களன்று தொடங்கி செவ்வாய் இரவும் முழுவதும் செயல்படும். இங்கு விற்பனை செய்யப்படும் ஜவுளி ரகங்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்க வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான வணிகர்கள் ஈரோடு வருவார்கள். குறிப்பாக அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த வணிகர்கள் அதிகளவில் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வருவார்கள். கடந்தாண்டு கொரோனா பரவலால் சில நாட்கள் மூடப்பட்டிருந்த ஈரோடு ஜவுளி சந்தை, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளால் மீண்டும் விறுவிறுப்புடன் செயல்பட்டது.

  இந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஈரோடு ஜவுளி சந்தை வணிகர்கள் கலக்கமடைந்துள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி வாகன தணிக்கை தீவிரமாக இருந்த காரணத்தால், பணம் எடுத்துச் செல்வதில் வியாபாரிகளுக்கு சிக்கல் இருந்தது. இதனால், ஈரோடு ஜவுளி சந்தையில் மந்த நிலையே காணப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்த நிலையில், மீண்டும் கொரோனா அச்சம் உருவவெடுத்து உள்ளது. ஜவுளி வணிகத்தை மேலும் தேக்கமடையச் செய்து விட்டதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

  கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளும், தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, வெளிமாநில வியாபாரிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் மற்றும் இரவு நேரங்களில் சந்தை செயல்படக் கூடாது என்ற நேரக் கட்டுப்பாடு ஆகியவற்றை வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

  கொரோனா அச்சம் மற்றும் கட்டுப்பாடுகளால் வெளிமாநில வணிகர்கள், ஜவுளி சந்தைக்கு இந்த வாரம் வரவில்லை. இதன் காரணமாக விற்பனை பாதிக்கப்பட்டதுடன், ஈரோடு ஜவுளி சந்தையும் வெறிச்சோடி காணப்பட்டது. உள்ளூர் மக்களின் வருகையும் குறைந்ததால், ஜவுளி விற்பனை மந்தமடைந்து உள்ளதாகவும் வியாபாரிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க... மங்களூரில் நடுக்கடலில் மீனவர்கள் படகு மீது கப்பல் மோதி 3 பேர் பலி...  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  ;
  Published by:Vaijayanthi S
  First published: