ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எம்ஜிஆர் காலத்தில் சிவாஜியால் எம்.எல்.ஏ ஆக்கப்பட்டவர்.. யார் இந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்?

எம்ஜிஆர் காலத்தில் சிவாஜியால் எம்.எல்.ஏ ஆக்கப்பட்டவர்.. யார் இந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்?

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்பற்றிய ஒரு சுவாரஸ்ய செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பெரியாரின் பேரன், ஈ.வெ.கி.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் 1984ல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிப்படையில் நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகரான இளங்கோவன், தனது அரசியல் குருவாகவும் சிவாஜி கணேசனையே ஏற்றிருந்தார். அந்த அடிப்படையில், 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவாஜி கணேசனின் பரிந்துரையால் சத்தியமங்கலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக வேட்பாளரைவிட இருமடங்கு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

எம்ஜிஆரின் மரணத்தைத் தொடந்து, அவரது மனைவி ஜானகி முதலமைச்சரானார். அவரது தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில், காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க மறுத்தது. குறிப்பாக, பிரதமரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த அதிமுகவையே ஆதரிப்போம் என்று தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் முளைத்தன.

குறிப்பாக, ஜானகி அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் வாக்களிக்க வேண்டுமென்று கோரினார் நடிகர் சிவாஜி. ஆனால், அதற்கு காங்கிரஸ் தலைமை சம்மதிக்காத நிலையில், சிவாஜி ஆதரவு எம்.எல்.ஏக்கள் பதவி விலகுவதாக அறிவித்தனர். அப்படி அறிவித்த சிவாஜி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுள் ஈவிகேஎஸ் இளங்கோவன் முக்கியமானவர்.

பிறகு காங்கிரஸிலிருந்து விலகி , தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கிய சிவாஜி அதிமுக ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து 1989 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தார். அப்போது, தமிழக முன்னேற்ற முன்னணி வேட்பாளராக பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அந்தத் தேர்தலில் இளங்கோவனுக்கு நான்காம் இடமே கிடைத்தது. அதன்பிறகு பலமுறை மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி தோல்விகளைப் பெற்றிருந்தபோதும், எந்தவொரு சட்டமன்றத் தேர்தலிலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டதில்லை.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈவெராவின் அகால மரணத்தால் அந்த வாய்ப்பு அவருக்கு வந்திருப்பது வருத்தத்துக்குரியது. என்றாலும், பொதுவாழ்க்கையில் எல்லாவற்றையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்ற அடிப்படையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களம் காண்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

First published:

Tags: Congress, Erode Bypoll, EVKS Elangovan