சம்பங்கி பூக்கள் கிலோ ரூபாய் 10 ஆக குறைந்ததால் விரக்தி அடைந்த விவசாயிகள் கொண்டு வந்த 2 டன் எடை கொண்ட சம்பங்கி பூக்களை குளக்கரையில் கொட்டி சென்றனர்.
சத்தியமங்கலம் கொத்தமங்கலம் தாண்டாம்பாளையம் கெஞ்சனூர் எரங்காட்டூர் மாரனூர் அய்யன்சாலை ஆலாம்பாளையம் மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை, முல்லை, சம்பங்கி, அரளி உள்ளிட்ட பல வகையான மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்களை விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பறித்து சத்தியில் உள்ள தனியார் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர் இவை பொது ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
பின்னர் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அன்று நிர்ணயித்த விலையில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த வாரம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்தது. மல்லிகை பூ கிலோ அதிகபட்சம் 1800 ரூபாய் வரை விற்பனையானது. இது தவிர சம்பங்கி பூ கிலோ 220 ரூபாய் வரை விற்பனையானது. இந்த மாதம் துவக்கத்தில் முக்கிய விசேஷங்கள் எதுவும் இல்லை இதனால் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது.
Also read... பருவம் தவறிய மழையால் மாம்பழம் விளைச்சல் பாதிப்பு - விலை இரு மடங்காக உயர்வு!
இந்த நிலையில் காலை வழக்கம்போல் விவசாயிகள் தங்களது பூக்களை விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். இதில் சம்பங்கி பூ கிலோ 10 ரூபாய்க்கு ஏலம் போனது, சிறிது நேரத்தில் விலை கேட்க ஆள் இல்லாததால் விரக்தியடைந்த விவசாயிகள் கொண்டு வந்த சம்பந்தி பூக்களை ஆங்காங்கே சாலையோரங்களில் மூட்டைகளை அவிழ்த்து அங்கேயே கொட்டி விட்டு சென்றனர்.
மேலும் ஆங்காங்கே கிராமப்புறங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரலாம் என்று இருந்த விவசாயிகள் விலை இல்லை என்று தெரிய வந்ததால் அவற்றை கிராமங்களிலேயே கொட்டி விட்டுச் சென்றனர்.
-செய்தியாளர்: தினேஷ். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.