'எனக்கா ஓட்டு போட்டீங்க' - குடிநீர் பிரச்னைக்கு ஊராட்சி மன்ற தலைவரின் அலட்சிய பதில்
'எனக்கா ஓட்டு போட்டீங்க' - குடிநீர் பிரச்னைக்கு ஊராட்சி மன்ற தலைவரின் அலட்சிய பதில்
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
TN Protest : கடந்த 6 மாதமாக எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வசதி இல்லை. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால் எனக்கா தாங்கள் ஓட்டு போட்டீர்கள் என கேட்கின்றார். இது குறித்து யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லிக் கொள்ளுங்கள் என கூறுகின்றார். எந்த ஒரு அடிப்படை வசதியம் செய்து தராத இந்த தலைவர் எங்களுக்கு எதற்கு? ஊராட்சி மன்ற தலைவர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கெட்டிசமுத்திரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த 6 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதில் கடந்த 15 தினங்களாக சுத்தமாக தண்ணீர் வழங்கப்படவில்லை என கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொது மக்கள் காலி குடங்களுடன் அந்தியூர் பர்கூர் பிரதான சாலையில் தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில், கடந்த 6 மாதமாக எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வசதி இல்லை. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால் எனக்கா தாங்கள் ஓட்டு போட்டீர்கள் என கேட்கின்றார். இது குறித்து யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லிக் கொள்ளுங்கள் என கூறுகின்றார். எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராத இந்த தலைவர் எங்களுக்கு எதற்கு? ஊராட்சி மன்ற தலைவர் பதவி விலக வேண்டும்.
இங்கு இருக்கும் அனைவரும் கூலி வேலைக்கு செல்பவர்கள் காலை சென்றால் மாலை தான் வருகிறோம். தண்ணீருக்காக நாங்கள் தோட்டம் தோட்டமாக குடிநீருக்கு சென்று அலைய முடியுமா? எங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் , திமுக எம்.எல்.ஏ வெங்கடாச்சலம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து 2 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த சாலை மறியலால் இரண்டு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது மேலும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.
செய்தியாளர்: தினேஷ்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.