சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலத்தில் லாரி ஓட்டுனரிடம் மாமூல் வாங்க போலீஸார் பேரம் பேசும் காட்சி சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றுப் பாலத்தின் வழியாகச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களை வழிமறித்து சோதனை செய்யும் போக்குவரத்து போலீசார் ஒரு லாரி ஓட்டுனரிடம் மாமூல் வாங்குவதற்காக நீண்ட நேரம் பேரம் பேசும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடகா செல்வதற்காக பவானி ஆற்றுப் பாலத்தின் மீது வந்த சரக்கு லாரி ஒன்றை வழிமறித்து நிறுத்திய போக்குவரத்து போலீசார் காவல்துறை ஜீப்பில் அமர்ந்து கொண்டு லாரி ஓட்டுனரிடம் மாமூல் கேட்டு மிரட்டினர்.
ஓட்டுனரின் உரிமத்தை வாங்கி கையில் வைத்துக் கொண்டு மாமூல் கேட்கின்றனர். அதற்கு பதிலளித்த லாரி ஓட்டுனர் என்னிடம் பணம் இல்லை என தனது பர்சை திறந்து காண்பித்து ஐம்பது ரூபாய் மட்டுமே உள்ளது இதை வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார். ஆனால் அதனை வாங்க மறுத்த போக்குவரத்து போலீசார் சிறிய வாகனங்களே 100 ரூபாய் கொடுக்கும் பொழுது நீ ஐம்பது ரூபாய் கொடுத்தால் எப்படி? உன் மீது வழக்கு போடட்டுமா. நீ இந்த ரோட்டில் வண்டி ஓட்டி விடுவாயா ஒழுங்காக 200 கொடுத்துவிட்டு போ என மிரட்டினர்.
அதற்கு பதிலளித்த லாரி ஓட்டுனர் தினமும் ஐம்பது ரூபாய் தான் கொடுத்து செல்கிறேன் இப்பொழுது இதை வாங்கிக் கொள்ளுங்கள் நீங்கள் அரசு சம்பளம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வாங்குகிறீர்கள் என்னிடம் 200 ரூபாய் கேட்பது நியாயமா எனக் கேட்டதற்கு சரி 200 ரூபாய் கொடுக்காட்டி பரவாயில்லை 100 ரூபாய் கொடு என போலீசார் மிரட்ட 100 ரூபாய் கொடுத்த லாரி ஓட்டுனர் பணத்தை கொடுத்துக்கொண்டே நல்ல காசுல சாப்பிடனும் சார் இல்லாட்டி லிவர், கிட்னி எல்லாம் போயிடும் என சாபம் விட, போயிட்டு போகுது என பதிலளித்த போலீசாரின் ஜீப் கிளம்புகிறது.
செய்தியாளர்: தினேஷ்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.