வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விலைக்கு மதுவகைகளை விற்பனை செய்வதாக எழுந்த புகாரினையடுத்து ஈரோட்டில் டாஸ்மாக் எலைட் கடையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
ஈரோடு அடுத்துள்ள திண்டலில் இருந்து வில்லசரம்பட்டி செல்லும் சாலையில் மாருதிநகரில் டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் உயர் ரக மதுவகைகள் விற்பனை செய்யும் எலைட் கடை செயல்பட்டு வருகின்றது. இந்த கடையில் 5 டாஸ்மாக் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மதுபாட்டில்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுபிரியர்கள் புகார் கூறி வந்தனர்.
ஒரு ஃபுல் பாட்டில் மீது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.20 கூடுதலாகவும், ஆஃப் பாட்டில் மீது ரூ.10ம் கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் இருந்து வந்தது. இது பற்றி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மதுபிரியர்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு புகார் சென்றது.
இதையடுத்து நேற்று இரவு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் எலைட் கடைக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடையில் இருந்த சரக்கு கொள்முதல் விபரம், இருப்பு நிலவரம், விற்பனை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த போது, கூடுதல் விலைக்கு விற்பனை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கணக்கில் வராத பணத்தை போலீசார் கைப்பற்றியதோடு, கடையில் பணியாற்றிய ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : மா.பாபு (ஈரோடு )
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.