மு.க.ஸ்டாலின் vs பழனிசாமி: வசீகரத் தலைவர்கள் இல்லாத தேர்தல் - களநிலவரம் யாருக்கு சாதகம்

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்

டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் பல தொகுதியில் ஒரு கட்சியின் வெற்றியைப் பாதிக்கும் வாய்ப்புகளைக் கொண்டது என்று மக்கள் நம்புகின்றனர்.

  • Share this:
இந்தக் கோடைக்காலத்தில் தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் கொளுத்தும் வெயிலில் சாலைகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தேர்தல் தேதி நெருங்கிவந்துள்ள நிலையிலும் ஆம்பூர் பகுதியிலிருந்து கோயம்புத்தூர் வரை எந்த அலையும் இல்லை.

இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது யாருக்கும் கணிக்க முடியாதபடி உள்ளது என்று பெரும்பான்மையான வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடக்கும் போட்டியில் ஆற்காடு பகுதியிலும், கொங்கு பகுதியிலும் இருவருக்குமான பலம் கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது.

பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின்


கடந்த 50 வருட தமிழக அரசியல் வரலாற்றில் இந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற வசிகரமான தலைவர்கள் இல்லாமல் தேர்தல் நடைபெறுகிறது. நான்கு வருடங்களுக்கு முன்னர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எதிர்பாராத விதமாக பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், தற்போது அவருக்கு கட்சியிலும் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இது எடப்பாடி பழனிசாமியின் மிகப்பெரிய சாதனையாகும். அவர், முதல்வராக பொறுப்பேற்று சில மாதங்களில் அவருடைய ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பலரும் நினைத்தனர். ஆனால், அவர் அந்த விமர்சனங்களைப் பொய்யாக்கும் வகையில் ஆட்சியைத் தொடர்ந்து நடத்திக்காட்டியுள்ளார். ஆனால், அது அவருடைய வெற்றியை உறுதிப்படுத்தும் என்று உத்தரவாதம் இல்லை.

பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி


ஆனால், அவருடைய கட்டுப்பாடுகளை மீறி அவர் ஆட்சியை இழப்பதற்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன. பத்து வருட அ.தி.மு.க ஆட்சியின் காரணமாக பல எம்.எல்.ஏக்கள் ஆளும் கட்சி எதிர்ப்பு மனநிலை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். வாக்காளர்களில் ஒரு தரப்பினர் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். ஒரு தரப்பினர், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததை விரும்பவில்லை. ஆனால், பெரும்பாலான மக்கள் அவருடைய ஆட்சி சிறப்பாக இருப்பதாகவே கருதுகின்றனர். அவர்கள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்குப் பதிவு செய்வதாக கூறினாலும், எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள உணவகத்தின் மேலாளர் சரத்குமார், ‘எடப்பாடி பழனிசாமி பிரபலமானவராக இருக்கிறார். நடுத்தர வர்க்கத்தினர் அவருக்கு வாக்கு போடுவார்கள் என்று நம்புகிறேன். அவர், சிறப்பாக ஆட்சி செய்துள்ளார். அவர், மோசமான முதல்வராக இல்லை. ஆனாலும், அவர் அடுத்த ஆட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பவில்லை. நெருக்கமான போட்டியில் தி.மு.க ஆட்சிக்கு வரும் என்று தெரிகிறது’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தெரிவித்த வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில், ‘நான், இரட்டை இலைக்கு வாக்களிப்பேன். ஆனால், எங்கள் பகுதியில் பலர் தி.மு.கவுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.

இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளான வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் தி.மு.க அதிக வாக்குகளைப் பெறும் என்று தெரிகிறது.

இந்த தேர்தல் குறித்து தெரிவித்த ஐ.டி துறையில் பணியாற்றும் சமீர் மற்றும் ரஃபீக், ‘எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்சியின் மீது எந்த அதிருப்தியும் இல்லை. ஆனால், பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளதால் தி.மு.கவுக்குதான் வாக்களிப்போம்’ என்று தெரிவித்தனர்.

அசாதுதீன் ஓவைசியின் அனைத்து இந்திய மஜ்லீஸ் -இ-இத்தேஹதுல் முஸ்லிமீன் கட்சியின் சார்பில் உருது பேசும் முஸ்லீம்கள் உள்ள இந்தப் பகுதியில் மூன்று வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் தமிழ் மொழியில் பேசினாலும் வீட்டில் உருது மொழியில் பேசுவார்கள். ஓவைசியின் கட்சி டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி வைத்திருந்தாலும், உள்ளூர் மக்கள் ஓவைசி கட்சியைப் பொருட்படுத்தவிலை. அக்கட்சி எந்தத் தொகுதியிலும் வெற்றிப் பெறப்போவதில்லை. மாறாக வாக்குகளை மட்டுமே பிரிக்கும் என்று கணித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த லெதர் கடை வேலை பார்க்கும் ஃபைசுல்லா, ‘எங்களுக்கு அவரை நன்றாகத் தெரியும். நாங்கள், அவருக்கு ஓட்டு போட்டால் தி.மு.க தோல்வியடையும். அவருக்கு எந்த ஆதரவும் இல்லை. சில இளைஞர்கள், அவரை நம்புகிறார்கள்’ என்று தெரிவித்தார்.

இந்தப் பகுதியில் உள்ள மக்கள், தி.மு.க வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகின்றனர். ஆனால், நாம் தோப்பூர் பகுதியைத் தாண்டி சேலம் பகுதிக்குச் சென்றுவிட்டால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவைப் பார்க்க முடிகிறது. முதல்வர் பழனிசாமி எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அந்தப் பகுதி மக்கள் தங்களுடைய மண்ணின் மைந்தன் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று விரும்புகின்றனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் கொங்குப் பகுதியில் அ.தி.மு.க பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க ஆட்சியமைப்பதில் கொங்கு பகுதி வெற்றியின் பங்கு முக்கியமானது. குறிப்பாக, சேலத்திலுள்ள 11 தொகுதியில் 10 தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. கடந்த முறைபோன்ற சேலம் தொகுதியில் மீண்டும் வெற்றி கிடைக்கும் என்று முதல்வர் பழனிசாமி நம்புகிறார். இந்தப் பகுதியில் சாதி அம்சமும் முக்கிய பங்காற்றும் என்று தெரிகிறது. கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையானவர்கள் அல்லது குறைந்தபட்ச நபர்களாவது ஆதரவு அளிப்பார்கள்.

இதுகுறித்து தெரிவித்த சேலம் பகுதியில் சேலை கடையில் கணக்காளராக பணியாற்றும் நபர், ‘முதல்வர் பழனிசாமியும் என்னைப் போல கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர். அவர், எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்’ என்று பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டிய இரண்டு காரணங்களை விவரிக்கிறார்.

டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் பல தொகுதியில் ஒரு கட்சியின் வெற்றியைப் பாதிக்கும் வாய்ப்புகளைக் கொண்டது என்று மக்கள் நம்புகின்றனர்.

இருப்பினும், ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையும் இருக்கிறது. இதுகுறித்து தெரிவித்த விவசாயி வேலுசாமி, ‘இயல்பாகவே ஒரு ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. பெரிதாக எந்தக் காரணமும் இல்லை. கடந்த ஆட்சியைப் போல இதுவும் இருக்க வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தைத் தவிர்த்து பிற அமைச்சர்கள் மாநிலம் தழுவிய அளவில் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. மற்ற அமைச்சர்கள் பெரும்பாலும் அவர்களுடைய சொந்த தொகுதியையே கவனித்துக்கொண்டிருக்கின்றனர். இது, அ.தி.மு.க போட்டியிடுவதற்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது என்று தி.மு.க கூறுவதற்கு வாய்ப்பாக உள்ளது.

பெண் வாக்காளர்கள் பலரும் இன்னமும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீதான ஈர்ப்பின் காரணமாக அ.தி.மு.கவுக்கு வாக்களிக்கும் மனநிலையில் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் உயர்தர உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் யாமினி பேசும்போது, ‘கடந்த காலங்களில் அ.தி.மு.கவுக்கு வாக்களித்தேன். ஆனால், இந்தமுறை யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து முடிவு செய்யவில்லை. நான், தேர்தல் தேதிக்கு முந்தைய நாள்தான் முடிவு செய்வேன். எனக்கு அ.தி.மு.கவுக்கும், தி.மு.கவுக்கு எதிராகவும் எந்த காரணமும் இல்லை. இது கடினமான முடிவு. பெரும்பான்மையான பெண்கள், யாருக்கு வாக்களிப்பது என்று இன்னமும் முடிவு செய்யாமலே உள்ளனர் அல்லது வெளியே சொல்வதற்கு மறுக்கின்றனர்’ என்று தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்திலுள்ள தொழிற்துறையினர் பா.ஜ.கவின் மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர். பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, ஊரடங்கு போன்ற காரணங்களால் பா.ஜ.கவின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்ததால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள், தி.மு.க வெற்றி பெற்றால் தொழிற் செய்வதற்கு வாய்ப்பு நல்லதாக இருக்கும் என்று கருதுகின்றனர்.

பா.ஜ.க ஏதேனும் தொகுதியில் வெற்றி பெற்றால் அது அ.தி.மு.கவின் தயவில் இருக்கும். பா.ஜ.கவுக்கு தமிழ்நாட்டில் எந்த வாக்கு வங்கியும் இல்லை. இந்தத் தேர்தல் யாருக்கு ஆதரவாகவும், யாருக்கும் எதிராகவும் அலை இல்லாத தேர்தல். பெரும்பாலான வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை வெளியே சொல்ல மறுக்கின்றனர். வாக்குப் பதிவு எந்த திசையில் வேண்டுமானாலும் செல்லலாம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: