தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றடைந்தார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் மேளதாள வாத்தியங்களுடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகம் திறப்பு விழா ஏப்ரல் 2ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். நள்ளிரவில் டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லியில் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். அப்போது, நீட், மேகதாது அணை, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது, டெல்லியில் ஏப்ரல் 2ம் தேதி புதிதாக திறக்கப்படும் அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கிறார். தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
Must Read : அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுகிறேன் - மதுரை கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன்
அதனைத் தொடர்ந்து, நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து, திமுக அலுவலக கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுவிக்க உள்ளார். ஏப்ரல் 2ம் தேதி திமுக அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இயக்கத்தின் கொள்கையும் உடன்பிறப்புகளின் உணர்வும் குழைத்து உருவாக்கப்பட்ட இலட்சிய மாளிகைதான் அறிவாலயம். அத்தகைய திராவிடக் கோட்டையாகத் தலைநகர் டெல்லியில் 'அண்ணா-கலைஞர் அறிவாலயம்' தலைநிமிர்கிறது!
தெற்கின் வரலாறு டெல்லியில் எழுதப்படுகிறது!#LetterToBrethren pic.twitter.com/QFRwDdnTgQ
— M.K.Stalin (@mkstalin) March 30, 2022
விழாவை முடித்துக் கொண்டு அன்று இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். இந்நிலையில், “இயக்கத்தின் கொள்கையும் உடன்பிறப்புகளின் உணர்வும் குழைத்து உருவாக்கப்பட்ட இலட்சிய மாளிகைதான் அறிவாலயம். அத்தகைய திராவிடக் கோட்டையாகத் தலைநகர் டெல்லியில் 'அண்ணா-கலைஞர் அறிவாலயம்' தலைநிமிர்கிறது! தெற்கின் வரலாறு டெல்லியில் எழுதப்படுகிறது!” என தமது டிவிட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM delhi visit, DMK, MK Stalin, Narendra Modi