கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!
கார்த்தி சிதம்பரம்
  • News18
  • Last Updated: October 11, 2018, 10:27 PM IST
  • Share this:
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக அன்னிய நிதி பெற்றுத் தந்தது தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் மதிப்பிலான உள்நாடு மற்றும்  வெளிநாட்டுச் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தை நிர்வகித்து வந்த பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர், தங்களது நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் அன்னிய நிதியை திரட்டினர். அத்தகைய முதலீடுகளுக்கு, அப்போதைய மத்திய நிதி அமைச்சரான ப.சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி தேவை.

அந்த நிதியை விதிமுறைகளை மீறி தந்தையின் உதவியுடன், கார்த்தி சிதம்பரம் பெற்றுத் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு கைமாறாக, கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனமான அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் கன்சல்டிங் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் கைமாறியதாகவும், சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.


இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை, கார்த்தி சிதம்பரத்தின் மீது சட்டவிரோத பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 54 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கொடைக்கானலில் உள்ள 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் நிலம், உதகை, கொல்லாடியாவில் உள்ள 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களா, கோத்தகிரியில் உள்ள 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பங்களா, டெல்லி ஜோர்பாகில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. இதில் டெல்லி வீட்டின் 50 சதவீத பங்கு நளினி சிதம்பரத்தின் பெயரில் உள்ளது. இதுதவிர, சென்னை வங்கியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தின் 90 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையும் முடக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இங்கிலாந்தின் சோமர்செட் கவுன்டியில் உள்ள 8.67 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு மற்றும் ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா அருகே உள்ள டென்னிஸ் கிளப் மற்றும் நிலம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கார்த்தி சிதம்பரம், இந்த வினோதமான, எங்கும் பார்த்திராத வகையிலான உத்தரவு சட்டத்தின்படியோ, உண்மையான காரணங்களின் அடிப்படையிலோ எடுக்கப்படவில்லை. விந்தையான அனுமானங்கள் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தலைப்புச் செய்திகளை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை நீதிமன்றத்தில் எடுபடாது என்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
First published: October 11, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading