கொரோனா பெருந்தொற்றால் 2020 ஆம் ஆண்டில் இருந்தே நமது வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அன்றாட வேலைகள் பெரிதும் மாற்றம் பெற்றுள்ளது. முன்பெல்லாம் வேலைக்காக அலுவலகம் சென்று பணிபுரிந்து வந்த நிலை மாறி, வீட்டில் இருந்தே வேலை செய்ய கூடிய நிலை கொரோனாவால் நமக்கு கிடைத்தது. ஒரு வகையில் இது நல்லது என்று நினைத்து கொண்டிருக்க, வேலை நேரம் என்பது கணக்கில் அடங்காமல் இருந்து வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை வீட்டில் இருந்தே பணிபுரிபவர்களில் பலர் 12 மணி நேரத்திற்கும் மேலாக அலுவலக வேலை செய்து வருகின்றனர்.
இதனால் பலருக்கு மன அழுத்தம், வேலையில் சிக்கல், குடும்ப பிரச்சனை போன்ற பாதிப்புகள் வர தொடங்கின. இது போன்ற அழுத்தங்களை குறைக்கவே அலுவலகத்திற்கு சென்று வேலை செய்து விட வேண்டும் என்று பலர் நினைக்க தொடங்கினர். வருகின்ற ஜனவரி 2022 முதல் பல ஐ.டி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வைக்க முடிவு எடுத்துள்ளது.
ஆரம்பத்தில் எல்லா நாட்களும் பணியாளர்களை வர சொல்வதை விடவும் வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்து வேலைசெய்ய ஐ.டி நிறுவனங்கள் பரிந்துரைக்க உள்ளனர். மேலும் முதல் கட்டமாக 50% பணியாளர்களை பணிக்கு அழைக்க உள்ளனர். கொரோனாவின் பாதிப்பு கருதி 45 வயதுக்கும் கீழுள்ள ஊழியர்களை மட்டும் அலுவலகத்திற்கு அழைக்க உள்ளனர். கொரோனா மூன்றாம் அலையின் நிலையை பொறுத்து இந்த முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம் என்று ஐ.டி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ALSO READ | கொரோனா தடுப்பூசி சான்றிதழ் போலியா ஒரிஜினலா கண்டுபிடிப்பது எப்படி?
குறிப்பாக எம்.என்.சி நிறுவனங்கள், 2022-இல் ஜனவரி முதல் ஜுலை மாதத்திற்குள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வரச்சொல்ல உள்ளதாக அறிவித்துள்ளனர். இரண்டாம் அலையின் தாக்கத்தால் வீட்டில் இருந்தே பணிபுரியும் கால அளவு அதிகரிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் கொரோனா மூன்றாம் அலை வந்தால் மட்டுமே வீட்டில் இருந்து பணிபுரியும் நிலை மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் புதிய வகை ஓமைக்ரோன் வைரஸ் காரணமாக சொத்து சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் இல்லை என்றும், பண்டிகைகாலங்களுக்கு பிறகு விற்பனையில் வளர்ச்சி வேகம் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (Credai) தெரிவித்துள்ளது. வரவிருக்கும் மாதங்களில் கொரோனா தொற்றில் கணிசமான உயர்வு ஏற்படும் வரை, கட்டுமானம் மற்றும் விநியோக முறை வேகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
ALSO READ | கோவிட்-19 துகள்களுடன் தொடர்பு கொள்ளும் போது ஒளிரும் மாஸ்க் : ஜப்பானிய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு
தகவல் தொழில்நுட்பத் துறை அமைப்பான நாஸ்காம் (Nasscom) நடத்திய ஆய்வின்படி, இந்தியாவின் 50%-க்கும் அதிகமான தொழில்நுட்பப் பணியாளர்கள் ஜனவரி மாதம் முதல், வாரத்திற்கு மூன்று முறை அலுவலகத்திற்கு வந்தாக வேண்டும்படி இருக்கும் என்று கூறியுள்ளது. மேலும் பல ஐ.டி நிறுவனங்கள் இப்போது படிப்படியாக மீண்டும் திறப்பதற்கு தயாராக உள்ளது மற்றும் ஒரு புதிய வேலை அமைப்பு மாதிரியை கடைபிடிக்க உள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக, சுமார் 18 மாதங்களுக்கு பிறகு வீட்டில் இருந்து வேலை செய்து வந்த ஐ.டி ஊழியர்கள் தற்போது அலுவலகத்திற்கு சென்று பணிபுரிய உள்ளனர். வருகின்ற 2022 ஆம் ஆண்டில் 50% மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிக்கு திரும்பும்படி தெரிவிக்க உள்ளனர். போட்டி நிறைந்த இந்த உலகில் நமது திறன்களை மெருகேற்றி கொண்டே முன்னேறி செல்வதே சிறந்த வழி என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.